Sunday, March 1, 2009

அழிந்து வரும் விவசாயம்! தற்கொலை செய்யும் விவசாயிகள்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

னால் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயத்தை விட்டு விட்டு நகர் புறத்திற்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதைப் பற்றி எல்லாம் நாம் அரசியல் வாதிகளுக்கு கவலை இல்லை. ஓட்டுக்காக ஒரு சில "இலவச" திட்டங்களை அறிவிப்பதோடு முடிந்து விடுகிறது அவர்களின் கடமை. 
விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகமோ இந்த நியதியைப் புறக்கணித்து, அறிந்தோ, அறியாமலோ தமிழக விவசாயத்தை புதை குழிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று இலட்சம் கறவை மாடுகளை வங்கி கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.
'உணவுப் பஞ்சம்' என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. என்றைக்கு வீட்டுக்குள் பாயும் என்று தெரியவில்லை. இத்தகையச் சூழலிலும் மற்ற துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைகூட வேளாண் துறைக்கு வழங்க நம் அரசு தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

விவசாயிகளின் நிலை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையிலிருந்து....

"அரசு ஊழியர்களுக்கு சம்பளக் கமிஷன்கள் உண்டு. தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுகள், பஞ்சப் படிகள், ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறவன் நாளரு வற்றலும் பொழுதொரு தளர்ச்சியுமாகத் தேய்ந்துகொண்டு இருக்கிறான். அரிசி, கோதுமை, சர்க்கரை, பால் என அரசு நிர்ணயித்திருக்கும் விலை, நிறுவனவயப்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்களைப் பாதுகாப்பதாகவும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிப்பதாகவும் இருக்கிறது. அரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு என்பதெல்லாம் புழுங்கிய நெல்லை முளைக்கவைக்கும் ஏமாற்றாக இருக்கிறது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1935-ல் 15 ரூபாய். 1959-ல் 60 ரூபாய். 1992-ல் 3 ஆயிரம் ரூபாய். 2009-ல் 10 ஆயிரத்து 500 ரூபாய். இந்த விகிதத்தில் 1935-ல் குவிண்டாலுக்கு 5 ரூபாயாக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்? மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், நெல்லும் பொன்னும் எனில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 என விற்க வேண்டும். ஆனால், அறுவடைக் காலமான தை மாதத்தில், நாஞ்சில் நாட்டில் இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 965 ரூபாய்.

மக்கள் தொகைப் பெருக்கத்தினால், தேவை பொன்னுக்கு மட்டுமின்றி நெல்லுக்கும்தான் அதிகரிக்கிறது. சிலர் கேட்பார்கள், பொன்னைத் தின்ன முடியுமா என்று. அது போல் வெறும் மண்ணையும் தின்ன முடியாது என்பது நமக்கு அர்த்தமாவதில்லை.தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் பொன்னின் விலை வரி வரியாக ஓடுகிறது. எவனாவது நெல்லின், கோதுமையின் விலை பற்றிச் சொல்கிறானா?

விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு எனப் பீத்துகிறார்கள். ஆனால், அந்த முதுகெலும்பு முறிந்தும், தண்டுவட வளையங்கள் கழண்டும், கூன் விழுந்தும் கிடக்கிறது என்பதை எவரும் கண்டுகொள்வதில்லை.ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று அரசாங்கங்கள் கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஜவான் எனில் ராணுவ வீரன்... கிஸான் எனில் உழவன்.ஆனால், 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர்.

இவர்களில் யாரும் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, அபிமான சினிமா நடிகை திருமணம் செய்துகொண்டதாலோ, வயிற்று வலியாலோ சாகவில்லை. கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்களின் நட்டங்களினால் தற்கொலை செய்துகொண்டவர்கள். போர்களில் இறக்கிறவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமானது. இதை அற்புதம் என்பீர்களா, திருவருள் என்பீர்களா?ஓர் இந்திய விவசாயி, துன்பம் தாளாமல் தனது குறியை அறுத்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த செய்தியை உங்களால் நம்ப இயலுமா?உலகமயமாதல் என்கிறார்கள். உலகம் ஒரே கிராமம் என்கிறார்கள். தகவல் தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள். சந்திரனுக்கு விண்கலன்கள் ஏவப்பட்டாயிற்று. ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்வன. தயார் நிலையில் உள்ளன. அணுகுண்டு ஆயத்த நிலையில் சாவு சுமந்து ஓய்வுகொள்கின்றன. ஆனால், சபிக்கப்பட்ட உழவர் இனத்துக் கண்ணீர் மஞ்சளுக்குப் பாய்ந்து இஞ்சிக்கும் பாய்ந்துகொண்டு இருக்கும்.

அரசாங்கம் எத்தனை புனுகு, சவ்வாது, சந்தனம் பூசினாலும், பிற வாசனைத் திரவியங்களைக் கொட்டி நிரப்பினாலும் இந்தத் துயரத்தின்... அவமானத்தின் நாற்றம் மாய்த்துப்போகுமா?இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக விவசாயி படும் பாட்டைப் பரணியாக, கலம்பகமாக, அந்தாதியாகப் பாட இயலுமா எவராலும்? யாருக்காக நடக்கின்றன இங்கு அரசாங்கங்கள்?

விவசாயத்தை வாழ்நெறியாகக்கொண்ட வாக்காளப் பெருமக்கள் நல்ல மழை பெய்யாதா, நாட்டு வளம் பெருகாதா என ஏங்கிய காலம் போய், இன்று எம்.எல்.ஏ சாவாரா, இடைத் தேர்தல் வாராதா என ஏங்கும் காலம் வந்துகொண்டு இருக்கிறது போலும்!"

எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா (!) என்ற ஆராய்ச்சிக்கு முன்னால், பூமியில் விவசாயத்தை மேம்படுத்த எதாவது செய்தல் புண்ணியமாக போகும்!

நன்றி : விகடன்

3 comments:

  1. அரசியல்வியாதிகளின் முகத்தில் அடிப்பதுபோல இருக்கிறது பதிவு.
    அரசாங்கம் விழித்துக்கொள்ளாது என்பது நமக்கு தெரிந்த விசயம்தானே.
    நமக்கு நாமே திட்டத்தில் நம்மால் முடிந்ததை செய்தால்தான் உண்டு.

    ReplyDelete
  2. உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகும் வரை இது தொடரும்!

    ReplyDelete
  3. Intha nilaiyai matra ilaingargal vivasayaththaiyum oru velaiaga ninaikkavendum

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com