Sunday, July 26, 2009

நீயா நானா - அருமையான விவாதம்!

நல்ல நீயா நானா ஷோவில் இதுவும் ஒன்று.


Part 1

Friday, July 10, 2009

நாடோடிகள் - விகடன் விமர்சனம்

ட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

சசிகுமார், பரணி, விஜய் மூவரும் கண்களில்கனவோடும் தோள்களில் தினவோடும் ராஜபாளையத்தை ரவுண்ட் கட்டும் நண்பர்கள். ஒரு பெருந் தொழில் அதிபரின் மகளான தன் காதலியைச் சேர்த்துவைக்க உதவுமாறு வெளியூரில் இருந்து வருகிறார் சசிகுமாரின் நண்பர் (எக்ஸ் எம்.பி-யின் மகன்). 'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' எனத் தொடை தட்டிக் கிளம்புகிறது சசிகுமார் அண்ட் கோ. நண்பனின்காதலியைக் கடத்தும் பரபர சேஸிங், ரேஸிங்கில் நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பு. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் பணயம்வைத்து இவர்கள் சேர்த்துவைத்த காதல் ஜோடி, சில நாட்கள் குடித்தனத்தில் தடாலென்று தடம் மாறி, தாலியைக் கழற்றி எறிந்து பிரிகிறார்கள். 'காதலுக்கு ஹெல்ப் பண்ற நண்பய்ங்க என்ன நொண்ணைகளா?' என்று பொங்கும் நாடோடிகளின் அதிரடி ஆவேசம்தான் மிச்சக் கதை.

'நண்பனின் நண்பன் நண்பனே' என்கிற நட்பு லைனில் விறுவிறு திரைக்கதையையும், பரபர ஆக்ஷனையும் இணைத்து, செம ஜாலி கதை பின்னி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அரசாங்க வேலைக்காக அப்ளிகேஷன் தட்டும் சசிகுமார், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருக்கும் பரணி, கம்ப்யூட்டர் சென்டர் லோனுக்கு அலையும் விஜய் என மூன்று நண்பர்களைப் பற்றிய அறிமுக எபிசோட் அசத்தல்.

'சரிங் மாமா' என எல்லாவற்றுக்கும் தலையாட்டும் 'வீட்டோட' மருமகன், 'வாழ்விழந்த இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக' வரும் ரித்தீஷ் டைப் சின்ன மணி கேரக்டர், மகனின் காதலுக்குத் தூது போகும் ஃப்ரெண்ட்லி அப்பா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குநர் செதுக்கி இருக்கும் விதம் அருமை.

சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு. ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் செல்லும்போது சசி குமாரின் முகத்தில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்கள். 'பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா' என்று காதலியின் தந்தையிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், கடைசியில், அதே டயலாக்கை வருத்தத்தோடு சொல்லிப் பிரிவதும் கவிதை. ஆனால், 'டேய்' என்று சசி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் 'சுப்ரமணியபுரம்' பரமன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்பா புள்ளையாக வரும் அமைதி 'சென்னை 28' விஜய்யும், ஜட்டியைத் தலையில் போர்த்தியபடி வலம் வரும் அடாவடி பரணியும் இயல்பான எதிரெதிர் துருவ நட்புப் பங்காளிகள். காது கேட்காமல் வீடு திரும்பும் பரணியை அவர் அப்பா அடிக்கும்போது, 'அப்பா நீ சொல்றது ஒண்ணுமே கேக்கலைப்பா!' என்று அவர் அழுது புலம்புவது எமோஷனல் எபிசோட்! சதா காலை ஆட்டிக் கொண்டு இருக்கும் விஜய்யின் அப்பா கேரக்ட ராக வரும் முத்துக்கிருஷ்ணன்... ஆஹா! பேங்க் பாஸ்புக்கைக் காண்பித்து மகனின் காதலுக்கு 'ஓ.கே' வாங்க முயல்வதும், காதலியோடு திரியும் மகனை கூலிங்கிளாஸ் கண்களோடு ரசிப்பதுமாக அசத்துகிறார்.

சசிகுமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா வுக்கு அறிமுகமாம்! சதா தீனிப் பண்டாரமாக, குறும்புப் பார்வையும் குசும்புப் பேச்சுமாக வெள்ளந்தித் தோழியாக ஈர்க்கிறார். சசிகுமாரின் கன்னத்தைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் பாசமும் 'என்னைக் கடத்துற சிரமத்தை நான் தர மாட்டேன். சிக்னல் மட்டும் காட்டு... சிட்டாப் பறந்து வந்திருவேன்' எனும் லூட்டியும், அட்றா சக்கை... அட்றா சக்கை!

கண்களாலேயே காதல் பேசிவிடும் அபிநயா கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளிலும் மனதைத் திருடுகிறார். (இயல்பான பெண்ணாகக் காட்சி அளிக்கும் இவருக்கு நிஜத்தில் பேச்சு வராது!)

'உங்க ஆட்டத்துல என்னைய ஏன்டா சேர்க்கிறீங்க?' என்று சசி கோஷ்டியிடம் கதறும் கஞ்சா கருப்பு... செம சிரிப்பு. படம் எடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் அதை ஃப்ளெக்ஸ் பேனரில் விளம்பரம் செய்யும் 'பப்ளிசிட்டி கோவிந்து' சின்னமணி (நமோ நாராயணன் -நிர்வாகத் தயாரிப்பாளர் - 'இங்கேயும் ஒரு பப்ளிசிட்டி!') தோன்றும்போதெல்லாம் கிபீர் குபீர் சிரிப்பு பட்டாஸ் கொளுத்துகிறார்.

வெட்டு, குத்து, அரிவாள், சாதி துவேஷ டயலாக்குகள் என கிராமத்து சினிமாவின் க்ளிஷேக்களைப் படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பது ஆறுதல். தொழில் அதிபர் பெண்ணைக் கடத்தும் அந்த டாப் கியர் எபிசோடுக்குப் பின்னணியாக வரும் 'சம்போ... சிவ சம்போ' பாடல் உறுமல் உத்வேகம் கூட்டுகிறது. வழக்கமான திருவிழாப் பாட்டு, 'வேற எந்த உறவையும்விட நட்புதான்டா பெருசு' என்று அடிக்கடி வரும் 'நட்பு பஞ்ச்'கள் மட்டும் பழைய மசாலா.

கட்டி முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேஷன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்று இருக்கிறது சுந்தர் சி.பாபுவின் இசை.

சசி அண்ட் கோ நண்பனின் காதலைச் சேர்த்து வைக்க என்னென்னவோ சாகசம் புரிகிறார்கள். ஆனால், காதலிக்கு போன் செய்து அவரை வரச் சொல்லும் சிம்பிள் ஐடியா மட்டும் அவர்களுக்குத் தோன்றவில்லையாம். மகனின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து நாமக்கல்லுக்குச் செல்லும் எக்ஸ் எம்.பி. அம்மா, அவர் கோவாவில் இருப்பதை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்காமலேயே இருக்கிறார். அத்தனை போலீசும் காதலர்களைத் தேட முடியாமல் தேமேவென சசி யின் வாய் பார்த்தே காத் திருப்பது 'கோடம்பாக்க' ஸ்டேஷனில்தான் சாத்தியம்.

நண்பனின் காதலியைக் கடத்தப் போகும் வழியில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சிக் குத்தாட்டம் போடுவது, கான்ட்ராக்ட் சமையல் வேலை என்று கதை திடீரென டிராக் மாறுவது போன்ற இடங்கள் கத்திரிக்குத் தப்பிய காட்சிகள்.

மெகா நீளம்தான் மைனஸ். ஆனால், அதையும் திகுதிகு திரைக்கதையால் மறக்கடிக்க வைக்கிறார்கள் ஜாலியான நாடோடி மன்னர்கள்!

நன்றி : விகடன்

நல்ல விமர்சனம் தான்! 43 மார்க் கொஞ்சம் கம்மி! உருப்படாத விஜய், அஜித் படத்துக்கெல்லாம் 40+ மார்க் போடும் போது இந்த படத்துக்கு இன்னும் அதிகமாவே போடலாம்.


திருந்தாத தமிழ் சினிமா!

மீபத்தில் M குமரன் S/O மகாலட்சுமி படம் பார்த்தேன். முதலில் நன்றாக துவங்கிய படம், நதியா இறந்த பிறகு மிகையாக மாறியது. தமிழ் சினிமாவிற்கே உரிய அம்மா, அப்பா, தங்கச்சி செண்டிமெண்ட், ஆபாசமான, அருவருக்க தக்க காமெடிகள், ஆங்கங்கே பாடல்கள், காதல் காட்சிக்கு மட்டும் ஹீரோயின். கடைசியாக வில்லனை வீழ்த்தி ஹீரோ ஜெயிப்பது, குடும்பத்தையும் காதலையும் சேர்த்து "சுபம்" போடுவது என்று டிபிகல் தமிழ் சினிமாவாக முடிந்தது. இந்த மாதிரி படங்களை எல்லாம் மூணு மணி நேரம் திரைஅரங்கில் பார்ப்பது கொடுமை. அடுத்தது என்ன நடக்கும், படம் எப்படி முடியும் என்பது பாதியிலேயே தெரிந்து விட்டது. இந்த படத்தில் வரும் அபத்தமான காட்சிகள், பொதுவாக எல்லா தமிழ் சினிமாவிலும் வரும்.

தங்கச்சியை வில்லன் கற்பழித்து விடுகிறான். வில்லன் கெட்டவன் என்று தெரிந்தும், அவனிடம் தங்கச்சியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஹீரோ கெஞ்சுகிறார். இறுதிப் போட்டியில் "நீ தோற்றால் உன் தங்கைச்சியை நான் கல்யாணம் செய்துக் கொள்கிறேன்" என்று வில்லன் சொல்வதை கேட்டு, வெற்றியை தியாகம் செய்யப் பார்க்கிறார். என்ன கொடுமை என்றால், ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால், அவன் தான் அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சாவதை தவிர அந்தப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை. ஒரு அய்யோகியனை கல்யாணம் செய்துக் கொண்டு அந்த பெண் எப்படி சந்தோசமாக வாழ முடியும்?
பெண்ணடிமைத்தனம் என்பது சினிமாவில் ஊறிப் போய் உள்ளது.

இரண்டாவதாக, காமெடி என்ற பெயரில் உடல் ஊனமுற்றோரையும், பெண்களையும், மனநிலை குறை பாடு உள்ளவர்களையும் அசிங்கப் படுத்துவது. இந்தப் படத்தில் வரும் காமெடியை போலவே (இன்னும் அசிங்கமாகவே) பல தமிழ் படத்தில் வருகிறது. இதையெல்லாம் எப்படி குடும்பத்தோடு ஒருவர் சென்று ரசிப்பது? பெண்களை இன்னும் sexual object ஆகவே சித்தரிக்கிறார்கள். கை, கால் ஊனம், திக்கு வாய், கண் பார்வை குறைவு, உடல் பருமன், சொட்டை தலை, என்று இந்த குறை பாடுகளை வைத்து காமெடி பண்ணுபவர்களே அதிகம். அந்த காலத்தில் கவுண்டமணி ஆரம்பித்தது. இன்னும் அதையே போட்டு அரைக்கிறார்கள்.

அடுத்தது, ஒரு கடை தெருவில் (அ) கோவில், காப்பி ஷாப், திரைஅரங்கு, பெரிய வணிக வளாகம் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் ஹீரோயினை (அ) ஹீரோவின் தங்கச்சியை வில்லன் கும்பல் கற்பழிக்க துரத்தும் (அந்த வில்லன் ஒரு மந்திரியின் மகனாகவோ, இல்லை பெரிய கடத்தல் காரனின் மகனாகவோ இருப்பார்). சிறிது நேரம் துரத்திக் கொண்டே இருப்பார்கள். கடைசியாக ஜாக்கெட்டை கிழிக்கும் போது ஹீரோவின் கை வந்து தடுக்கும். அதுக்கப்பறம் நடக்கபோவது தெரிந்ததுதான். பார்த்து பார்த்து சலித்து, புளித்து போய்விட்டது.

காதல் கட்சிகளுக்கும், சில ஆபாச அசைவுகளுக்கு மட்டுமே ஹீரோயின். வெள்ளை தோளோடு, குறைந்த பட்ச உடையோடு, கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலம் பேசிக் கொண்டு ஒரு லூசு போல வளம் வருபர்தான் இந்த ஹீரோயின். சுகாசினி, ஊர்வசி, ரேவதி போன்ற நடிகைகளுக்கு அப்பறம் யாரும் நடிக்கிற மாதிரி தெரியல. சினேகா, பார்வதி மாதிரி ஒன்னு ரெண்டு தான் தேறுது. இங்கேயும் பெண் ஒரு sexual object தான்.

மகள் கற்பமாக உள்ளது தெரியும் போது பூச்சி மருந்து வாங்கி தற்கொலைக்கு முயல்வது, அம்மாவை டைவர்ஸ் செய்யும் அப்பா, சித்தி கொடுமை, தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கும் பாடல்கள்...இன்னும் பல பல அபத்தங்கள்...

எப்போது திருந்தும் இந்த தமிழ் சினிமா?


Thursday, July 9, 2009

அமெரிக்க பொருளாதாரமும், அதிபர் ஒபமாவும்!

டந்த ஆண்டு பின்பாதியில் சரிய துவங்கிய பொருளாதாரம் இன்னும் மீண்ட பாடில்லை. உலக நாடுகளில் பலவற்றிலும் இந்த பாதிப்பு இருந்தாலும், மேற்கத்திய நாடுகளை அதிகம் பாதித்தது. பல பெரிய நிறுவனங்கள் திவாலானதால், வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது.வேலை இழந்தவர்கள் வேறு எங்கும் சேர முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர். வேலையில் இருப்போரோ எப்போது தூக்குவார்கள் எனத் தெரியாமல், தினம் தினம் பயத்துடனே அலுவலம் செல்கின்றனர். கல்லூரியிலிருந்து பட்டம் வாங்கிக் கொண்டு புதிதாக வெளிவரும் மாணவர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.

இந்த வருட துவக்கத்தில் அதிபர் ஒபாமா பதவியேற்றவுடன், எதாவது செய்து மாற்றம் கொண்டு வருவார் என மக்கள் எதிர் பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதிபர் ஒபாமா பதவி ஏற்கும் போது சரிவிலிருந்து மீள்வதற்கு முன்னால், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி அடையும் என்று சொன்னார். அது தான் இப்போது நடக்கிறதோ என்னவோ!

வேலை இல்லாதோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசின் கணக்கெடுப்பின்படி 9.5 சதவிகிதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததை விட 1% அதிகம். திவாலாகி கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் இருந்து $787 பில்லியன் டாலர்களை கொடுக்க முன் வந்தது அமெரிக்க அரசு. இதில் ஒரு சிறு பகுதியை ஏற்கனவே கொடுத்து முடித்து விட்ட நிலையில், இரண்டாவது தவணை தேவையா என்று பெரும் விவாதமே நடந்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளை மாளிகையின் கணக்குப் படி இந்த திட்டம் சுமார் ஆறு இலட்சம் வேலை வாய்ப்புகளை கோடை காலத்திற்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் ஒபாமா பதவி எற்புக்கு பின் சுமார் இரண்டு பில்லியன் வேலை வாய்ப்புகள் பறி போனது. இந்த stimulus திட்டம் ஒன்றரை இலட்சம் வேலைகளை மட்டுமே தக்கவைத்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால், இந்த திட்டம் தொடர வேண்டுமா என்று காங்கிரசில் விவாதம் நடந்து கொண்டுள்ளது.

குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், இந்த திட்டம் ஒபமாவின் தவறான முடிவு என்றும், இப்படி மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், அதிகாரிகளையும் வேறு விதமாக சொல்கிறார்கள். இந்த திட்டத்தின்படி பொருளாதரத்தை மீட்க இரண்டுவருடங்கலாவது ஆகும் என்றும், இப்போது அளித்துள்ள பணம் மிகக் குறைவானது என்று சொல்கின்றனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் $1.7 ட்ரில்லியன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு. இது அமெரிக்காவின் GDPஇல் 12% ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் முதன் முறையாக இப்போதுதான் இவ்வளவு நிதிப் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.சமீபத்தில் Quinnipiac University எடுத்த வாக்கெடுப்பின் படி சுமார் 48 சதவிகிதம் பேர் ஒபமாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர். ஈராக் பிரச்னை, நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம் என பல சவால்களை சூழ்ந்திருக்கும் அதிபர் ஒபாமா என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, July 2, 2009

ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ்

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமொன்ஸ் .... டேன் பிரவ்ன் இன் இரண்டாவது நாவல் திரைப்படமாக வந்துள்ளது. நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது சில பிரச்சனைகள் வரும். நாவலில் சுவராஸ்யமாக, ஒவ்வொரு சீனும் விலாவரியாக வர்ணிக்கப் பட்டு இருக்கும். அதை இரண்டு மணிநேரத்தில் படமாக எடுப்பது சிரமம். ஏற்கனவே வந்த டா வின்சி கோட், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த முறை கொஞ்சம் பரவில்லை...
கதையின் கரு அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள முரண்பாடு (அ) சண்டையை பற்றியது. இல்லுமினடி (Illuminati) என்ற ஒரு குழு பதினெட்டாம் நூற்றாண்டிலில் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் ஆடம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பழமைவாதிகளையும், அவர்கள் பேச்சை கேட்டு ஆட்சி நடத்திய அரசியல்வாதிகளையும் எதிர்த்து முற்போக்கு வாதிகளால் வழி நடத்தப்பட்டது. இந்த குழுவை ( Modern Illuminati) சேர்ந்த வில்லன், போப் இறந்தவுடம் அடுத்த போப்பாக வர வாய்ப்புள்ள நன்கு கர்டினல்களை கடத்திக் சென்று ஒவ்வொருவரையாக கொலை செய்கிறான். அதோடு இல்லாமல், Anti-matter எனப்படும் அணு சக்தி வை விட பல மடங்கு வலிமையுள்ள substance கடத்தி சென்று , அதை வைத்து ரோமையே அழிக்க முற்படுகிறான்.

இந்த கொலையாளியை கண்டுபிடிக்க, கர்டினல்களை காப்பற்ற குறியீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ராபர்ட் லங்க்டன் (Tom Hanks) ரோமுக்கு வருகிறார். Anti-matter உருவாக்கிய ஆராய்ச்சியாளரின் மகள் (Ayelet) ராபர்ட் உடன் சேர்த்து பேரழிவை தடுக்க முற்படுகிறார். ராபர்ட் எப்படி கொலையாளியை கண்டு பிடிக்கிறார், கொலையாளி யார் என்ற மர்மங்ககளை சிறிது சுவாரசியத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.

- அன்டி மாட்டார் உள்ள அறைக்கு செல்ல கண்ணின் கருவிழியை (Ratina) கடவுச் சொல்லாக பயன் படுத்துகிறார்கள். கதையின் படி, ஆராய்ச்சியாளரின் கண்ணை தோண்டி எடுத்து அதை வைத்து கொலையாளி உள்ளே செல்கிறான். அனால் தோண்டப் பட்ட கண்ணும் அவரது உடலும் அறைக்கு உள்ளே கிடக்கின்றன! லாகிக் படி ஆது அறைக்கு வெளியே தான் இருக்க வேண்டும். அல்லது உள்ளே இழுத்து சென்றதற்கான அறிகுறியாவது இருந்திருக்க வேண்டும்.
- பொது ( Public Place) இடத்தில கார்டினல்களை கொலை செய்யப் போவதாக சொல்லும் கொலையாளி, ஒருவரை மட்டுமே பொது இடத்தில் வைத்துக் கொள்கிறான். மற்ற இருவரும் கொள்ளப் படும் இடம் மக்கள் நடமாடும் இடமாக தெரியவில்லை
- அப்படி பொது இடத்தில் ஒரு காடினல்லை கொலை செய்யும் விதமும் இயல்பாக இல்லை. அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் சாதரணமாக ஒருவரை கிடத்தி விட்டு செல்கிறார்.

-ரோம் போலிசும், ஸ்விஸ்ஸ் கார்டும் என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதோ சாதரணமாக ஒரு கொலையை விசாரிப்பது போல் ஜாலியாக திரிகிறார்கள். ஹீரோ, ராபர்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற போலீசர்களை டம்மி ஆக்கிவிட்டார்கள். இதையெல்லாம் தாண்டி படம் நன்றாகத்தான் இருக்கிறது. ரோம் அதனை சுற்றியுள்ள இடங்களை நன்றாக கட்டியுள்ளனர். ரொம்பவும் போரடிக்காமல் கொஞ்சம் விறு விறுப்பாகவே போகிறது

 
Watch the latest videos on YouTube.com