கடந்த ஆண்டு பின்பாதியில் சரிய துவங்கிய பொருளாதாரம் இன்னும் மீண்ட பாடில்லை. உலக நாடுகளில் பலவற்றிலும் இந்த பாதிப்பு இருந்தாலும், மேற்கத்திய நாடுகளை அதிகம் பாதித்தது. பல பெரிய நிறுவனங்கள் திவாலானதால், வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது.வேலை இழந்தவர்கள் வேறு எங்கும் சேர முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர். வேலையில் இருப்போரோ எப்போது தூக்குவார்கள் எனத் தெரியாமல், தினம் தினம் பயத்துடனே அலுவலம் செல்கின்றனர். கல்லூரியிலிருந்து பட்டம் வாங்கிக் கொண்டு புதிதாக வெளிவரும் மாணவர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.
இந்த வருட துவக்கத்தில் அதிபர் ஒபாமா பதவியேற்றவுடன், எதாவது செய்து மாற்றம் கொண்டு வருவார் என மக்கள் எதிர் பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதிபர் ஒபாமா பதவி ஏற்கும் போது சரிவிலிருந்து மீள்வதற்கு முன்னால், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி அடையும் என்று சொன்னார். அது தான் இப்போது நடக்கிறதோ என்னவோ!
வேலை இல்லாதோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசின் கணக்கெடுப்பின்படி 9.5 சதவிகிதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததை விட 1% அதிகம். திவாலாகி கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் இருந்து $787 பில்லியன் டாலர்களை கொடுக்க முன் வந்தது அமெரிக்க அரசு. இதில் ஒரு சிறு பகுதியை ஏற்கனவே கொடுத்து முடித்து விட்ட நிலையில், இரண்டாவது தவணை தேவையா என்று பெரும் விவாதமே நடந்துக் கொண்டிருக்கிறது.
வெள்ளை மாளிகையின் கணக்குப் படி இந்த திட்டம் சுமார் ஆறு இலட்சம் வேலை வாய்ப்புகளை கோடை காலத்திற்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் ஒபாமா பதவி எற்புக்கு பின் சுமார் இரண்டு பில்லியன் வேலை வாய்ப்புகள் பறி போனது. இந்த stimulus திட்டம் ஒன்றரை இலட்சம் வேலைகளை மட்டுமே தக்கவைத்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால், இந்த திட்டம் தொடர வேண்டுமா என்று காங்கிரசில் விவாதம் நடந்து கொண்டுள்ளது.
குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், இந்த திட்டம் ஒபமாவின் தவறான முடிவு என்றும், இப்படி மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், அதிகாரிகளையும் வேறு விதமாக சொல்கிறார்கள். இந்த திட்டத்தின்படி பொருளாதரத்தை மீட்க இரண்டுவருடங்கலாவது ஆகும் என்றும், இப்போது அளித்துள்ள பணம் மிகக் குறைவானது என்று சொல்கின்றனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் $1.7 ட்ரில்லியன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு. இது அமெரிக்காவின் GDPஇல் 12% ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் முதன் முறையாக இப்போதுதான் இவ்வளவு நிதிப் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.சமீபத்தில் Quinnipiac University எடுத்த வாக்கெடுப்பின் படி சுமார் 48 சதவிகிதம் பேர் ஒபமாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர். ஈராக் பிரச்னை, நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம் என பல சவால்களை சூழ்ந்திருக்கும் அதிபர் ஒபாமா என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment