Friday, July 10, 2009

நாடோடிகள் - விகடன் விமர்சனம்

ட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

சசிகுமார், பரணி, விஜய் மூவரும் கண்களில்கனவோடும் தோள்களில் தினவோடும் ராஜபாளையத்தை ரவுண்ட் கட்டும் நண்பர்கள். ஒரு பெருந் தொழில் அதிபரின் மகளான தன் காதலியைச் சேர்த்துவைக்க உதவுமாறு வெளியூரில் இருந்து வருகிறார் சசிகுமாரின் நண்பர் (எக்ஸ் எம்.பி-யின் மகன்). 'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' எனத் தொடை தட்டிக் கிளம்புகிறது சசிகுமார் அண்ட் கோ. நண்பனின்காதலியைக் கடத்தும் பரபர சேஸிங், ரேஸிங்கில் நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பு. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் பணயம்வைத்து இவர்கள் சேர்த்துவைத்த காதல் ஜோடி, சில நாட்கள் குடித்தனத்தில் தடாலென்று தடம் மாறி, தாலியைக் கழற்றி எறிந்து பிரிகிறார்கள். 'காதலுக்கு ஹெல்ப் பண்ற நண்பய்ங்க என்ன நொண்ணைகளா?' என்று பொங்கும் நாடோடிகளின் அதிரடி ஆவேசம்தான் மிச்சக் கதை.

'நண்பனின் நண்பன் நண்பனே' என்கிற நட்பு லைனில் விறுவிறு திரைக்கதையையும், பரபர ஆக்ஷனையும் இணைத்து, செம ஜாலி கதை பின்னி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அரசாங்க வேலைக்காக அப்ளிகேஷன் தட்டும் சசிகுமார், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருக்கும் பரணி, கம்ப்யூட்டர் சென்டர் லோனுக்கு அலையும் விஜய் என மூன்று நண்பர்களைப் பற்றிய அறிமுக எபிசோட் அசத்தல்.

'சரிங் மாமா' என எல்லாவற்றுக்கும் தலையாட்டும் 'வீட்டோட' மருமகன், 'வாழ்விழந்த இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக' வரும் ரித்தீஷ் டைப் சின்ன மணி கேரக்டர், மகனின் காதலுக்குத் தூது போகும் ஃப்ரெண்ட்லி அப்பா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குநர் செதுக்கி இருக்கும் விதம் அருமை.

சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு. ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் செல்லும்போது சசி குமாரின் முகத்தில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்கள். 'பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா' என்று காதலியின் தந்தையிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், கடைசியில், அதே டயலாக்கை வருத்தத்தோடு சொல்லிப் பிரிவதும் கவிதை. ஆனால், 'டேய்' என்று சசி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் 'சுப்ரமணியபுரம்' பரமன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்பா புள்ளையாக வரும் அமைதி 'சென்னை 28' விஜய்யும், ஜட்டியைத் தலையில் போர்த்தியபடி வலம் வரும் அடாவடி பரணியும் இயல்பான எதிரெதிர் துருவ நட்புப் பங்காளிகள். காது கேட்காமல் வீடு திரும்பும் பரணியை அவர் அப்பா அடிக்கும்போது, 'அப்பா நீ சொல்றது ஒண்ணுமே கேக்கலைப்பா!' என்று அவர் அழுது புலம்புவது எமோஷனல் எபிசோட்! சதா காலை ஆட்டிக் கொண்டு இருக்கும் விஜய்யின் அப்பா கேரக்ட ராக வரும் முத்துக்கிருஷ்ணன்... ஆஹா! பேங்க் பாஸ்புக்கைக் காண்பித்து மகனின் காதலுக்கு 'ஓ.கே' வாங்க முயல்வதும், காதலியோடு திரியும் மகனை கூலிங்கிளாஸ் கண்களோடு ரசிப்பதுமாக அசத்துகிறார்.

சசிகுமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா வுக்கு அறிமுகமாம்! சதா தீனிப் பண்டாரமாக, குறும்புப் பார்வையும் குசும்புப் பேச்சுமாக வெள்ளந்தித் தோழியாக ஈர்க்கிறார். சசிகுமாரின் கன்னத்தைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் பாசமும் 'என்னைக் கடத்துற சிரமத்தை நான் தர மாட்டேன். சிக்னல் மட்டும் காட்டு... சிட்டாப் பறந்து வந்திருவேன்' எனும் லூட்டியும், அட்றா சக்கை... அட்றா சக்கை!

கண்களாலேயே காதல் பேசிவிடும் அபிநயா கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளிலும் மனதைத் திருடுகிறார். (இயல்பான பெண்ணாகக் காட்சி அளிக்கும் இவருக்கு நிஜத்தில் பேச்சு வராது!)

'உங்க ஆட்டத்துல என்னைய ஏன்டா சேர்க்கிறீங்க?' என்று சசி கோஷ்டியிடம் கதறும் கஞ்சா கருப்பு... செம சிரிப்பு. படம் எடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் அதை ஃப்ளெக்ஸ் பேனரில் விளம்பரம் செய்யும் 'பப்ளிசிட்டி கோவிந்து' சின்னமணி (நமோ நாராயணன் -நிர்வாகத் தயாரிப்பாளர் - 'இங்கேயும் ஒரு பப்ளிசிட்டி!') தோன்றும்போதெல்லாம் கிபீர் குபீர் சிரிப்பு பட்டாஸ் கொளுத்துகிறார்.

வெட்டு, குத்து, அரிவாள், சாதி துவேஷ டயலாக்குகள் என கிராமத்து சினிமாவின் க்ளிஷேக்களைப் படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பது ஆறுதல். தொழில் அதிபர் பெண்ணைக் கடத்தும் அந்த டாப் கியர் எபிசோடுக்குப் பின்னணியாக வரும் 'சம்போ... சிவ சம்போ' பாடல் உறுமல் உத்வேகம் கூட்டுகிறது. வழக்கமான திருவிழாப் பாட்டு, 'வேற எந்த உறவையும்விட நட்புதான்டா பெருசு' என்று அடிக்கடி வரும் 'நட்பு பஞ்ச்'கள் மட்டும் பழைய மசாலா.

கட்டி முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேஷன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்று இருக்கிறது சுந்தர் சி.பாபுவின் இசை.

சசி அண்ட் கோ நண்பனின் காதலைச் சேர்த்து வைக்க என்னென்னவோ சாகசம் புரிகிறார்கள். ஆனால், காதலிக்கு போன் செய்து அவரை வரச் சொல்லும் சிம்பிள் ஐடியா மட்டும் அவர்களுக்குத் தோன்றவில்லையாம். மகனின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து நாமக்கல்லுக்குச் செல்லும் எக்ஸ் எம்.பி. அம்மா, அவர் கோவாவில் இருப்பதை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்காமலேயே இருக்கிறார். அத்தனை போலீசும் காதலர்களைத் தேட முடியாமல் தேமேவென சசி யின் வாய் பார்த்தே காத் திருப்பது 'கோடம்பாக்க' ஸ்டேஷனில்தான் சாத்தியம்.

நண்பனின் காதலியைக் கடத்தப் போகும் வழியில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சிக் குத்தாட்டம் போடுவது, கான்ட்ராக்ட் சமையல் வேலை என்று கதை திடீரென டிராக் மாறுவது போன்ற இடங்கள் கத்திரிக்குத் தப்பிய காட்சிகள்.

மெகா நீளம்தான் மைனஸ். ஆனால், அதையும் திகுதிகு திரைக்கதையால் மறக்கடிக்க வைக்கிறார்கள் ஜாலியான நாடோடி மன்னர்கள்!

நன்றி : விகடன்

நல்ல விமர்சனம் தான்! 43 மார்க் கொஞ்சம் கம்மி! உருப்படாத விஜய், அஜித் படத்துக்கெல்லாம் 40+ மார்க் போடும் போது இந்த படத்துக்கு இன்னும் அதிகமாவே போடலாம்.


1 comment:

  1. கடைசி ரெண்டு லைன், விமர்சனத்துக்கு விமர்சனமா! :)

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com