Friday, September 18, 2009

விகடன் விமர்சனம் : ஈரம்

னதில் ஈரம் இல்லாதவர்களை அந்த 'ஈரம்' பழி வாங்கினால்... அதுதான் கதை!அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்துகிடக் கிறார் சிந்து மேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்குக் காரணம் என அடித்துச் சொல்கிறது அக்கம்பக்கம். ஆனால், 'நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல' என்று உறுதியாக நம்புகிறார் காவல் துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம், அவரும் சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களைத் தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால், சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேன னின் மரணம் கொலையா, தற்கொலையா,தொடர்ச் சியான மரணங்களுக்குக் காரணம் என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது ஈரம்!

ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண் ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி-சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்து மேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல் பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக் டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும் காவல் அதிகாரியின் இன்டெலி ஜென்ட்விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளைக் கடக்கும்போது எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலைக் கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன் அதே இயல்புடன் நடிக்க வும் செய்கிறார். திருச்சி கல்லூரியின் சராசரி மாணவி, புது மணப் பெண் எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை. வில்லனாக நந்தா. டி.வி-யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்து மேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒரு முறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் கிளாஸ்.

கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாகச் சொல்கிறார்கள். கொலையாளி
யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால், அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனைக் கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்?

அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்று கிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!


நன்றி : விகடன்


Wednesday, September 9, 2009

இலவச திருமணங்கள் தேவையா?

எப்போதான் இந்த இலவசங்கள் நிற்குமோ? இரண்டு லட்சத்து 29 ஆயிரம் திருமணங்களை நிதி கொடுத்து நடத்தியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும். எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாமலும், துணி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இங்கு என்னடா ன்ன, இலவச தொலைக்காட்சியும், பொங்கல் வெய்க்க மாளிகை சாமானும், குறைந்த விலையில் தரமான மதுவும் கொடுக்கிறார்கள். மக்கள் பணத்தில் தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்கள். கடைசியாக "இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது" என்று சொல்லி தனது ஆசையையும் வெளிப்படுத்திவிட்டார் தலைவர்.



செய்தி:


சென்னை :""தி.மு.க.,வின் குரலை அடக்க தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். தி.மு.க., சார்பில், 86 ஜோடிகளுக்கு நேற்று அண்ணா அறிவாலயத் தில் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை வீட்டுத் திருமணம் என்றால், 5,000 ரூபாய் வீதம் தந்து, பின் 10 ஆயிரம் ரூபாய் என விரிவாக்கி, 20 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.



ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் நிதி அளிக்கப்பட்டு நடந்த திருமணங்கள், இரண்டு லட்சத்து 29 ஆயிரம். அந்தப் பெரும் கடலில், இன்று நடக்கிற இந்த 86 திருமணங்களும் இணைகின்றன. இது என் 86 வயதைக் குறிக்கும் அடையாளமாக நடக்கிறது.வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறும்போது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் கிளம்பினேன். வாரத்தில் ஐந்து நாட்களாவது என் இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடக்கிறது. இங்கு 86 திருமணங்களை நடத்தி அவர்களுக்கு தரப்பட்ட சீர்வரிசைகள், விளக்கு, குடம், வேறு பொருட்கள், இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது.



அந்த அளவுக்கு பளபளக்கும் விளக்குள், குடங்கள், தாம்பாளங்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு நடத்தும் திருமணங்கள் இன்றி தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். நெருக்கடி காலத்தில், கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு, நம் கட்சியினர் சீர்திருத்த திருமணங்களில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், நெருக்கடி, அடக்குமுறைகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, கட்சியை தழைக்கச் செய்யும் வல்லமை தி.மு.க.,வினருக்கு உண்டு.எந்த வசதிகள் இருந்தாலும், எந்த வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டாலும், நம் குரல் ஓங்கி ஒலிக்கும். ஏனெனில், இது ஈ.வெ.ரா.,வின் குரல்; அண்ணா துரையின் குரல். இந்தக் குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்றார்.


நன்றி: தினமலர்

 
Watch the latest videos on YouTube.com