Saturday, August 27, 2011

கிறுக்கல்கள் - ஒன்று

மறுபடி எதாவது கிறுக்கலாம் என்று இருக்கிறேன். ரொம்ப நாளா இந்த பக்கமே வரல. இந்த பக்கத்தை ஆரம்பிச்சு எதாவது எழுதலாம் என்று இருந்தேன். எழுத தெரியல. மறுபடி எனது வாசிப்பை துவங்கி இருக்கிறேன். மறுபடி சுஜாதா. சில புத்தகங்களை ஆன்லைன் ல வாங்கி படிக்க ஆரம்பித்து இருக்கேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும். ஆனந்த விகடனில் தொடராக அவந்தபோது படித்தது. அதன் பிறகு புத்தகமா வந்தபோது வங்கிப் படித்தேன். சில சமயம் இணையத்தில் படித்ததுண்டு. ஒவ்வொரு தடவை படிக்கும்போது, அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை. தினமும் அலுவலகத்தில், உணவு இடைவேளையின் போது நாலைந்து அத்தியாயங்கள் படிப்பேன். சுகம். படித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அதற்குள் முடிந்து விட்டதே! இன்னும் வாங்கிப் படிக்க வேண்டும். படிக்க பொறுமை வேண்டும், அதை விட எழுத. பள்ளியில் படிக்கும் போது நிறைய படிப்பேன், எழுதுவேன். விவாதிக்க நிறைய பேர் இருந்தார்கள். இப்போதெல்லாம், தமிழ் படித்தவர்களை காண்பதே அரிதாக இருக்கிறது. சுஜாதா, எப்படி இவ்வளவு விசயங்களை தெரிந்து வைத்துள்ளார் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாத்தையும் படித்து, புரிந்து அழகாக, எளிய நடையில் எழுதுகிறார். ம்ம்..பார்க்கலாம். நாமும் எதாவது எழுதலாம். அட..எழுதிதான் பாக்கலாமே. எப்படி ஆரம்பிப்பது? ஒரு பக்க கதை எழுதலாமா? சிறுகதை? விஞ்யான சிறுகதை? இல்ல கற்றதும் பெற்றதும் போல , பார்த்ததை, படித்ததை, அனுபவங்களை எழுதலாமா? தெரியல...ஆனா எதையாவது எழுதி 'நடை' பயில வேண்டும். தோணுவதை எல்லாம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

Thursday, March 4, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விகடன் விமர்சனம்

ன்னைத் தானே தாண்டி வர முடியாமல் தவிக்கிறாள் காதலி... என்ன நடக்கும் என்பது கதை!

சிம்பிள் காதல் சினிமா. ஆனால், சிம்பு - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி... கிளாஸிக். 23 வயது வரை ஐந்தே சினிமாக்கள் மட்டுமே பார்த்திருக்கும் த்ரிஷாவை, சினிமா இயக்குநர் கனவில் இருக்கும் 22 வயது சிம்பு காதலிக்கிறார். மனம், மதம், இனம் எனப் பல காரணங்களை அடுக்கி சிம்புவின் காதலைத் தவிர்க்கும் த்ரிஷா என்ன செய்தார் என்பதைச் சொல்கிறது செம வித்தியாச கிளைமாக்ஸ்!

'காதல் டிலைட்' கௌதம் மேனனின் 'காதலர் ஸ்பெஷல்' படம். 'என் கண்ணு வழியா உன்னை யாரும் பார்க்கலை போல!', 'உன்னை முதல் தடவை பார்த்தப்ப, உன் தலைக்கு மேல இருந்த நிலா ஃபேடாகி அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகிருச்சு!', 'இனி எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். 'நினைக்காதே... முடிஞ்சு தான்போச்சு'ன்னு சொன்னா!' என அழகழகான க்ரீட்டிங் கார்டு வசனங்களே படம் முழுக்கக் காதல் நிரப்புகிறது.

வம்புதும்பு செய்யாத, விரல் வித்தை காட்டாத ஸ்மார்ட் சிம்பு. 'இவருக்குள் இப்படி ஒரு கிளாஸிக் ஆக்டரா?' என்று பல இடங்களில் நம்மை ஆச்சர் யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். காதலில் விழுந்து, கசிந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து, தவித்து... மாஸ்டர்பீஸ் கச்சிதம். வெளிநாட்டுப் பூங்காவில் த்ரிஷாவிடம், 'என் வாழ்க்கையிலும் ஒரு பொண்ணு கடந்துபோனா!' என்று ஆரம்பித்து, கண்ணீர் மறைத்து, வேதனை கடித்து, காதலில் வெம்பும் இடத்தில்... மார்வெலஸ் சிம்பு! இதுவரையிலான கிளாமர் ஹீரோயின் இமேஜ் துடைத்து, பளிச் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் த்ரிஷா... ஸோ க்யூட்! 'நண்பன்' சிம்புவின் குறும்புகளுக்கு இரும்புக் கதவாகப் பூட்டிக்கொள்வதும், ரயில் பயண முத்தங்களின்போது கதவிடுக்குக் குளிர்க் காற்றாக நெகிழ்வதும்... ஏரியா ஏஞ்சல் அழகு!

'நான் பெரிய ஆளுடா... எந்தப் பிரச்னை வந்தாலும் நான் பாத்துக்கிறேன்' என்று உதார்விடுவதும், 'இது மட்டும் கோடம்பாக்கத்துக்குத் தெரிஞ்சா... அவ்வளவுதான்!' என உதறுவதுமாக காதல் கதையில் கலகலப்பு சேர்க்கிறார் 'ஒளிப்பதிவாள நண்பர்' கணேஷ்ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தொனிக்கும் தாமரையின் பாடல்களுக்கு ஒவ்வொரு துடிப்பிலும் காதல் தவழவிடுகிறது ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ஆஸ்கருக்குப் பிறகான ரஹ்மான் டச்சில் 'ஹோசோனா', 'ஓமனப் பெண்ணே...' பாடல்கள் சர்வதேசச் சரக்கு.

இருள், பால் வெள்ளை நிலா, தென்னை மரங்கள், கரையோர வீட்டு வாசல் த்ரிஷா... கேரள அழகைக் கொள்ளைகொள்ளும் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா மொத்தப் படத்துக்கும் ரம்மிய டோன் சேர்க்கிறது.

முதல் பாதி காதல் ஃபீல்... பின்பாதி ஆரம்பித்ததுமே வற்றி வடிந்துவிடுவது ஏனோ கௌதம்? திரும்பத் திரும்ப, 'அப்பாவுக்குப் பிடிக்கணும்!' என்று கிளிப்பிள்ளை காரணம் சொல்லி, காதலை அத்தனை சிக்கலாக்கிக்கொள்ளும் த்ரிஷாவின் மனநிலையில் ஏன் அத்தனை குழப்பம்? முகவரி இல்லாமல், காதலிக்கிறாளா என்று தெரியாமல் காதலியைத் தேடிப் போகும் ஹீரோ, இரவு ரயில் பயணங்கள், வில்லனுக்கு கௌதம் மேனனின் குரல், மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஹீரோ, அத்தனை நடனங்களிலும் உடலை வளைத்து மடக்கி, ஒடித்து ஆடும் அமெரிக்க டான்ஸர்கள் என்று படம் நெடுக கௌதம் கிளிஷேக்கள்! முதல் பாதிக் காட்சிகளே இரண்டாம் பாதியை மீண்டும் மீண்டும் நிரப்பும் சமயங்களில், கண்ணைக் கட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை!

அநாவசிய நீளம், ஓயாத பேச்சு என்று சிலபல குறைகள் இருந்தாலும், கௌதம் மேனனின் காதல் பரிசுக்காக டிராஃபிக் தாண்டி தியேட்டர் தொடலாம்!

நன்றி : விகடன்

Wednesday, March 3, 2010

ஹர்ட் லாக்கர்

ஹர்ட் லாக்கர்!

இராக்கில் நடக்கும் போரில், வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் ஒரு குழுவின் செயல்பாடுகளை கூர்ந்து காட்டும் படம். கேதரின் என்ற பெண் இயக்குனரின் இந்தப் படம் ஆஸ்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஒரு போர்க்களத்தின் செயல்பாடுகளை எந்தவித ஆரவாரமும் இன்றி விறு விறுப்பாகவும், ஆழமான செய்தியோடும் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் ஒரு தெருவில் வைக்கைபட்டுள்ள வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய வீரர்கள் வருகிறார்கள். இரண்டு வீரர்கள் 'snifer' உடன் தெருவில் உள்ளவர்களை நோட்டமிட, ஒரு தானியங்கி இயந்திரத்தை வேண்டிகுண்டு இருக்கும் இடத்தை நோக்கி அனுப்புகிறார்கள். அது பாதியில் செயலிழந்து விட , வெடிகுண்டு நிபுணர் ஒருவர் அதை பழுது பாக்க செய்கிறார். வீரர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும், வேடிக்கை பார்க்கும் மக்களையும் காட்டுகிறார்கள். தீடீரென்று சல சசலப்பு.... ஒரு கறிக்கடையில் நின்று ஒருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார்... அவரை சந்தேகிக்கும் அமெரிக்க வீரர்கள், வெடுகுண்டு நிபுணரை எச்சரித்து திரும்ப அழைக்கிறார்கள். அவர் ஓடிவரும்பொழுது, குண்டு வெடிக்கிறது!!!!

இதே போன்று மூன்று குண்டுகளை செயலிக்க இந்த குழு படும் பாடு தான் படம்! மிக அழகான திரைக்க்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நம்மை இரண்டு மணிநேரம் கட்டிப் போட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டை செயலிக்க செய்யும்போது மரணத்தின் வாசலை எட்டிப் பார்க்கிறார் "Bomb Specialist' ஆகா வரும் "ஜெரேமி". இப்படி தினம் தினம் குண்டுகளுடன் வாழ்க்கை நடத்தி வரும் இராக், ஆப்கான் மக்களை நினைக்கும் போது துயரமாக உள்ளது. படத்தில் இறுதியில் ஒரு மனித வெடிகுண்டை செயலிழக்க முயல்கிறார் ஜெரேமி. ஒரு அப்பாவி இராகியின் உடலில் வெடிகுண்டுகளை அனுப்பி விடுகிறார்கள் தீவிரவாதிகள். அந்தக் கட்சியை பார்க்கும் போதே வேதனையான உள்ளது...
பார்க்க வேண்டிய படம்!

முன்னோட்டத்தைப் பார்க்க இங்கே ....

Sunday, November 22, 2009

சகாயம் ஐ ஏ எஸ்

இந்த வாரம் விகடனில் வந்த கட்டுரை.... இப்படியும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது .

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.

நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

நன்றி : விகடன்

Thursday, October 1, 2009

உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து தியேட்டருக்கு சென்று பார்த்த படம். நல்ல படம். கமல், மோகன் லால், அவருக்கு கீழ் பணிபுரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், டிவி நிருபர் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.வசனத்தை சிறப்பாக எழுதி இருந்தார் முருகன். ஒளிப்பதிவும் மிக அருமை. ஹிந்தி படத்தை விட மிக அருமையாக இருந்தது. செயற்கையான பாடல் கட்சிகள் இல்லாமல், காமெடி என்ற பெயரில் ஆபாசம் செய்யாமல் இரண்டு மணி நேரத்தில் விறு விறுப்பான படம்!

படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, கமல் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு படத்தின் வெற்றியைப் பற்றி சிலாகித்து பேசினார். Youtube இல் பார்த்தேன். அதிர்ந்தேன். தான் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது போல பேசி மற்றவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்தார். ஸ்ருதியைப் பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றிப் பேசியது ரொம்ப கம்மி. பலரும் வசனத்தை பெரிதும் பாராட்டினர். உண்மை. வசனங்கள் எல்லாம் மிக அருமையை இருந்தது. ஆனால், படத்தின் வசனகர்த்தாவான முருகனைப் பற்றி பேச்சே இல்லை. அவருடைய பேரை எந்த இடத்திலும் உச்சரிக்கவே இல்லை! அதை விடக் கொடுமை, இந்தக் கதையை தானே சிந்திததுபோல் பேசியதுதான். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணம் படத்தின் கதை. அது கதையின் சொந்தக் காரரான நீரஜ் க்கு மட்டுமே போய் சேரும்.

இன்னொரு கொடுமை மோகன் லாலைப் பற்றி பேசாதது. உண்மையிலேயே , கமலை விட எனக்கு லாலின் நடிப்புதான் பிடித்திருந்தது. அனுபம் கேர் ரை விட பல மடங்கு சிறப்பாக செய்து படத்தை துடிப்புடன் கொண்டு செல்பவர் அவர்தான். இப்படி எல்லாரையும் இருட்டடிப்பு செய்து, ஏன் இப்படி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் தான் மகளைப் பற்றி ஒரே பேச்சு. கமல் ஒரு சிறந்த நடிகர் , நல்ல சினிமா அறிவுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மற்றவரை பாராட்டும் குணம் இப்பொழுது அவரிடம் குறைந்து வருகிறது. "நான்" என்ற ஆணவமோ?

இந்தக் கதையைப் போல, சுயமாக சிந்தித்து, வருங்காலத்தில் நல்ல படங்களை ( தசாவதாரம் போல் இல்லை!) கமல் எடுப்பார் என்று நம்புவோமாக.

Friday, September 18, 2009

விகடன் விமர்சனம் : ஈரம்

னதில் ஈரம் இல்லாதவர்களை அந்த 'ஈரம்' பழி வாங்கினால்... அதுதான் கதை!அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்துகிடக் கிறார் சிந்து மேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்குக் காரணம் என அடித்துச் சொல்கிறது அக்கம்பக்கம். ஆனால், 'நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல' என்று உறுதியாக நம்புகிறார் காவல் துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம், அவரும் சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களைத் தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால், சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேன னின் மரணம் கொலையா, தற்கொலையா,தொடர்ச் சியான மரணங்களுக்குக் காரணம் என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது ஈரம்!

ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண் ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி-சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்து மேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல் பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக் டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும் காவல் அதிகாரியின் இன்டெலி ஜென்ட்விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளைக் கடக்கும்போது எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலைக் கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன் அதே இயல்புடன் நடிக்க வும் செய்கிறார். திருச்சி கல்லூரியின் சராசரி மாணவி, புது மணப் பெண் எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை. வில்லனாக நந்தா. டி.வி-யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்து மேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒரு முறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் கிளாஸ்.

கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாகச் சொல்கிறார்கள். கொலையாளி
யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால், அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனைக் கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்?

அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்று கிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!


நன்றி : விகடன்


Wednesday, September 9, 2009

இலவச திருமணங்கள் தேவையா?

எப்போதான் இந்த இலவசங்கள் நிற்குமோ? இரண்டு லட்சத்து 29 ஆயிரம் திருமணங்களை நிதி கொடுத்து நடத்தியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும். எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாமலும், துணி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இங்கு என்னடா ன்ன, இலவச தொலைக்காட்சியும், பொங்கல் வெய்க்க மாளிகை சாமானும், குறைந்த விலையில் தரமான மதுவும் கொடுக்கிறார்கள். மக்கள் பணத்தில் தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்கள். கடைசியாக "இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது" என்று சொல்லி தனது ஆசையையும் வெளிப்படுத்திவிட்டார் தலைவர்.செய்தி:


சென்னை :""தி.மு.க.,வின் குரலை அடக்க தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். தி.மு.க., சார்பில், 86 ஜோடிகளுக்கு நேற்று அண்ணா அறிவாலயத் தில் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை வீட்டுத் திருமணம் என்றால், 5,000 ரூபாய் வீதம் தந்து, பின் 10 ஆயிரம் ரூபாய் என விரிவாக்கி, 20 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் நிதி அளிக்கப்பட்டு நடந்த திருமணங்கள், இரண்டு லட்சத்து 29 ஆயிரம். அந்தப் பெரும் கடலில், இன்று நடக்கிற இந்த 86 திருமணங்களும் இணைகின்றன. இது என் 86 வயதைக் குறிக்கும் அடையாளமாக நடக்கிறது.வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறும்போது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் கிளம்பினேன். வாரத்தில் ஐந்து நாட்களாவது என் இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடக்கிறது. இங்கு 86 திருமணங்களை நடத்தி அவர்களுக்கு தரப்பட்ட சீர்வரிசைகள், விளக்கு, குடம், வேறு பொருட்கள், இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது.அந்த அளவுக்கு பளபளக்கும் விளக்குள், குடங்கள், தாம்பாளங்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு நடத்தும் திருமணங்கள் இன்றி தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். நெருக்கடி காலத்தில், கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு, நம் கட்சியினர் சீர்திருத்த திருமணங்களில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், நெருக்கடி, அடக்குமுறைகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, கட்சியை தழைக்கச் செய்யும் வல்லமை தி.மு.க.,வினருக்கு உண்டு.எந்த வசதிகள் இருந்தாலும், எந்த வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டாலும், நம் குரல் ஓங்கி ஒலிக்கும். ஏனெனில், இது ஈ.வெ.ரா.,வின் குரல்; அண்ணா துரையின் குரல். இந்தக் குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்றார்.


நன்றி: தினமலர்

 
Watch the latest videos on YouTube.com