நண்பரின் பழைய பேப்பர் கடையிலிருந்து, வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்து வருட நாட்குறிப்பு கிடைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த முதல் மூன்று வருடங்களும் ஒரு நாள் விடாமல் தொடர்ச்சியாகவும், அதன் பின் அவ்வப்போதுமாக சுமார் 1,300 நாட்கள் எழுதியிருக்கிறாள். அதிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன்.
கல்லூரியில் முதல் நாள் வேண்டாம் என்று சொன்னபோதும், அப்பா கல்லூரி வரை வந்து, விட்டுவிட்டுத்தான் போனார்.அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டேன். நான் செல்லும் முன்பே ஐந்தாறு பேர் வகுப்பில் இருந்தனர். ஒரு சிலரிடம் பேசினேன். என்னுடன் பள்ளியில் படித்த கலா, வசந்தியைத் தவிர்த்து, மற்ற அனைவரும் வேறு எங்கிருந்தோ வந்தவர்கள். பாடம் எதையும் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை. குமார் என்பவன் சரி விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருந்தான். மிகவும் இனிமையான நாள்.
இன்று சரியான மழை! பிய்த்தெறிந்துவிட்டது! நானும் காயத்ரியும் சந்தோஷமாக நனைந்தோம். வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது. அதன் பிறகு மின்னல்கள் நிகழ்த்திய ஆனந்தத் தாண்டவமிருக்கிறதே... அப்பப்பா! காணக் கோடிக் கண்கள் வேண்டும்! இது போன்ற ஓர் அற்புதத்தை இனி எப்போது பார்க்கப்போகிறேனோ?
ஆகஸ்டு 6. பிறந்த நாள் என்பதால் அம்மாவுடன் காலையில் கோயிலுக்குப் போனேன். நான் நினைத்ததைவிட நாள் மிக இனிமையாகக் கழிந்தது. மதியம் காலேஜ் கட். ஹோட்டல், ஐஸ்க்ரீம், பதினாறு வயதினிலே, திரும்பவும் ஐஸ்க்ரீம். படம் நன்றாக இருந்தது. முடிந்து வெளியே வரும்போது, தலையைக் கோதியவாறு என்னிடம் ஒருவன், ''இது எப்டி இருக்கு?'' என்றான். முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, முறைப்பது போல் பார்த்தேன். திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டான். ஆள் பிரமாதமாக இருந்தான்.
அதரப்பள்ளி! மாமா சொன்னதைவிட அமர்க்களமாக இருந்தது. என்ன ஒரு பிரமாண்டம்! குதித்துவிடலாம் போலிருந்தது! உமாவுடனும் காயத்ரியுடனும் ஒரு முறையாவது தனியாக வர வேண்டும். 'பார்த்து! ஜாக்ரதை!' என்று அம்மா 300 முறையாவது சொல்லியிருப்பாள். கீழிருந்து பார்த்தபோது அருவி பேரழகுடன் இருந்தது. காயத்ரி வந்திருந்தால் கெட்ட ஆட்டம் போட்டிருப்பாள்!
இன்று உமா ஒரு தினுசாக இருந்தாள். பார்வையும் சரியில்லை. விசாரித்தால், ரமேஷ்பாபு 'லெட்டர்' குடுத்த விஷயம் தெரிந்தது. என்னென்னவோ பிதற்றியிருந்தான். அவளுக்காக ஈஃபில் டவர் உச்சியிலிருந்துகூட விழுந்துவிடுவானாம். கவிதை எழுதியிருந்தான். ''அதெல்லாம் வேணாம். ரொம்ப தூரம் போகணும். ஆசைப்பட்டா நம்ம லைப்ரரி பில்டிங்ல இருந்து குதிக்கச் சொல்லு'' என்றேன். சிரிப்பை அடக்க முடியவில்லை. கோபமாக முறைத்தாள். அத்துடன் விட்டுவிட்டேன். ''கவனமாக இரு'' என்று மட்டும் கிளம்பும்போது சொன்னேன். உமாவும் 'விழுந்துவிட்டாள்' என்றுதான் நினைக்கிறேன். காயத்ரி கேஸ்தான் இவளும்.
இன்று குட்டிக்கு முதல் 'மழை'. 11 வயதுதான் ஆகிறது. பாவம்! எனக்கும் ரம்யாவுக்கும் பரவாயில்லை. 14 வயதில்தான் வந்தது. நல்ல வேளையாக இன்று விடுமுறை. அழுதுகொண்டே அம்மாவிடம் சொன்னாள். வாரியணைத்து, மடியில் வைத்துக்கொண்டாள். நான்தான் 'மழைத் துணி' வைத்துவிட்டேன்.
இன்று திருப்பதிக்குப் போயிருந்தோம். சரியான கூட்டம். வெயில், புழுக்கம் தாங்க முடியவில்லை.இனிமேல், திருப்பதிக்கு வருவதாக இருந்தால், டிசம்பரில்தான் வர வேண்டுமென்று அம்மாவிடம் சொன்னேன். அருண் வழிநெடுக அடம்பிடித்து அழுதுகொண்டே வந்தான். ரம்யாவும் குட்டியும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே வந்தார்கள். எனக்குத்தான் பொழுதே போகவில்லை.
நான் வரைந்த ஓவியத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. ஜட்ஜ் ஒரு முட்டாள். வேறொரு காலேஜைச் சேர்ந்த எவனோ ஒருவனுக்கு முதல் பரிசு கொடுத்துவிட்டான். காயத்ரி ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாள்.
நான் நினைத்தது போலவே உமா காலி. அவளும் ரமேஷ் பாபுவும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவனது பார்வையும், புளித்த சிரிப்பும் எனக்குப் பிடிக்கவில்லை.
மாமா அவரது ரெண்டு உம்மணாமூஞ்சி மகள்களுடன் வந்திருந்தார். பாபுவை அழைத்து வரவில்லை. bad luck! ஏதோ tournament-க்கு திருச்சி போயிருக்கிறானாம். இன்று சுத்த போர்!
இன்று செகண்ட் இயர் பெண் ஒருத்தி காலேஜ் செல்லும் வழியில் தயங்கித் தயங்கி அழைத்து, ''அக்கா தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எங்களுக்குள்ள அடிக்கடி உங்களப்பத்தி பேசிக்குவோம். பேசிக்கிட்டு இருக்கும்போதே ரொம்ப லைட்டா நீங்க கண்ணடிக்கிற ஸ்டைலும் பிரமாதம்'' என்றாள். மகிழ்ச்சியாக இருந்தது.
இன்று காயத்ரியின் பிறந்த நாள். பேசிச் சிரித்து வீடு திரும்ப லேட்டாகிவிட்டது. ஏழு மணி தாண்டி வீடு திரும்பினால் அப்பாவைச் சமாளிக்க முடியாது என்பதால், பின் பக்கக் கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்தேன். நான் வருவதைக் கவனித்த அப்பா எதுவும் கேட் காமல், வாயில் வந்தபடி கேவலமாகத் திட்டிவிட்டார். இன்றைய நாளின் சந்தோஷமனைத்தும் ஒரே நொடியில் வடிந்துபோனது. இவரைப்பற்றிய இந்த நாளின் கோபத்தை எழுதப்போவதில்லை. எழுதினால், குறைந்துவிடும். மனதிலேயே இருக்கட்டும்.
உமாவுக்கும் ரமேஷ் பாபுவுக்கும் ஏதோ சண்டை. அப்செட்டில் இருந்தாள். அப்படியே தொடர்ந்தால் அவளுக்கு நல்லது. பார்ப்போம்.
எதற்கும் சரிவராத கவிதாவும் இன்று எங்களுடன் சேர்ந்துகொண்டாள். கூல்டிரிங்க்ஸ் குடித்துவிட்டு பஸ் ஏறலாமென்று காயத்ரி சொன்னாள். பார்த்தால், யாரிடமும் பணமில்லை. காயத்ரியிடம் வலிய வந்து செந்தில் மாட்டினான். அவனிடம் பத்து ரூபாய் கேட்டாள். இருபது ரூபாயாகக் கொடுத்து, அரை மணி நேரத்தை 'இழு இழு' என்று இழுத்துவிட்டான். அவன் விலகியதும் 'ஜவ்வு மிட்டாய் ஒழிந்தான்' என்றாள். வழியெல்லாம் அவனைப்பற்றிப் பேசிச் சிரித்து, வயிறு புண்ணாகிவிட்டது.
Farewell day மனது மிகக் கஷ்டமாக இருந்தது. மாறி மாறிப் பேசிக்கொண்டே இருந்தோம். வெங்கட், கணேஷ், டெல்லி பாபு மூவரும் என்னிடமிருந்து விலக மனமில்லாமல் இருந்தார்கள். எனக்கும் மனமில்லை. கணேஷ் மிகவும் எமோஷனலாக இருந்தான். வீட்டுக்குக் கிளம்பவே விருப்பமில்லை. இப்போது வரை மனம் ஒரு நிலையில் இல்லை. நாளை?
உமாவும் கவிதாவும் அப்ளிகேஷன் வாங்கிவிட்டார்கள். நானும் மேலே படிக்கிறேன் என்று அப்பாவிடம் திரும்பவும் கேட்டுப் பார்த்தேன். படித்தது போதுமென்று சொல்லிவிட்டார். அம்மாவிடம் அழுது பார்த்தேன். அவளுக்கு விருப்பம்தான். ஆனால், அப்பாவிடம் பேச முடியாது என்று சொல்லிவிட்டாள். எனக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டது. கொஞ்சம் பொறுத்துத் திருமணம் செய்துகொள்கிறேன் என்றால் அவர் கேட்பதாக இல்லை.
நிர்மலா வந்திருந்தாள். அவர்களது வீட்டில் சரிவராததால், அடுத்த வாரம் ரிஜிஸ்டர்மேரேஜ் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள். ஜோசப்பின் நண்பர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாகவும், நான்கு தெரு தள்ளி வீடுகூடப் பார்த்துவிட்டதாகவும் கூறினாள். அவளுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நான் நினைக்கிறேன். ஜோசப் நல்ல மாதிரிதான்.
இந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு அவள் எதுவும் எழுதவில்லை... அல்லது அவை கிடைக்கப் பெறவில்லை! - ஜெய்குமார் | ||
நன்றி : விகடன் |
No comments:
Post a Comment