ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1935-ல் 15 ரூபாய். 1959-ல் 60 ரூபாய். 1992-ல் 3 ஆயிரம் ரூபாய். 2009-ல் 10 ஆயிரத்து 500 ரூபாய். இந்த விகிதத்தில் 1935-ல் குவிண்டாலுக்கு 5 ரூபாயாக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்? மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், நெல்லும் பொன்னும் எனில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 என விற்க வேண்டும். ஆனால், அறுவடைக் காலமான தை மாதத்தில், நாஞ்சில் நாட்டில் இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 965 ரூபாய்.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால், தேவை பொன்னுக்கு மட்டுமின்றி நெல்லுக்கும்தான் அதிகரிக்கிறது. சிலர் கேட்பார்கள், பொன்னைத் தின்ன முடியுமா என்று. அது போல் வெறும் மண்ணையும் தின்ன முடியாது என்பது நமக்கு அர்த்தமாவதில்லை.தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் பொன்னின் விலை வரி வரியாக ஓடுகிறது. எவனாவது நெல்லின், கோதுமையின் விலை பற்றிச் சொல்கிறானா? விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு எனப் பீத்துகிறார்கள். ஆனால், அந்த முதுகெலும்பு முறிந்தும், தண்டுவட வளையங்கள் கழண்டும், கூன் விழுந்தும் கிடக்கிறது என்பதை எவரும் கண்டுகொள்வதில்லை.ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று அரசாங்கங்கள் கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஜவான் எனில் ராணுவ வீரன்... கிஸான் எனில் உழவன்.ஆனால், 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர். இவர்களில் யாரும் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, அபிமான சினிமா நடிகை திருமணம் செய்துகொண்டதாலோ, வயிற்று வலியாலோ சாகவில்லை. கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்களின் நட்டங்களினால் தற்கொலை செய்துகொண்டவர்கள். போர்களில் இறக்கிறவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமானது. இதை அற்புதம் என்பீர்களா, திருவருள் என்பீர்களா?ஓர் இந்திய விவசாயி, துன்பம் தாளாமல் தனது குறியை அறுத்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த செய்தியை உங்களால் நம்ப இயலுமா?உலகமயமாதல் என்கிறார்கள். உலகம் ஒரே கிராமம் என்கிறார்கள். தகவல் தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள். சந்திரனுக்கு விண்கலன்கள் ஏவப்பட்டாயிற்று. ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்வன. தயார் நிலையில் உள்ளன. அணுகுண்டு ஆயத்த நிலையில் சாவு சுமந்து ஓய்வுகொள்கின்றன. ஆனால், சபிக்கப்பட்ட உழவர் இனத்துக் கண்ணீர் மஞ்சளுக்குப் பாய்ந்து இஞ்சிக்கும் பாய்ந்துகொண்டு இருக்கும். அரசாங்கம் எத்தனை புனுகு, சவ்வாது, சந்தனம் பூசினாலும், பிற வாசனைத் திரவியங்களைக் கொட்டி நிரப்பினாலும் இந்தத் துயரத்தின்... அவமானத்தின் நாற்றம் மாய்த்துப்போகுமா?இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக விவசாயி படும் பாட்டைப் பரணியாக, கலம்பகமாக, அந்தாதியாகப் பாட இயலுமா எவராலும்? யாருக்காக நடக்கின்றன இங்கு அரசாங்கங்கள்? விவசாயத்தை வாழ்நெறியாகக்கொண்ட வாக்காளப் பெருமக்கள் நல்ல மழை பெய்யாதா, நாட்டு வளம் பெருகாதா என ஏங்கிய காலம் போய், இன்று எம்.எல்.ஏ சாவாரா, இடைத் தேர்தல் வாராதா என ஏங்கும் காலம் வந்துகொண்டு இருக்கிறது போலும்!"எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா (!) என்ற ஆராய்ச்சிக்கு முன்னால், பூமியில் விவசாயத்தை மேம்படுத்த எதாவது செய்தல் புண்ணியமாக போகும்!
அரசியல்வியாதிகளின் முகத்தில் அடிப்பதுபோல இருக்கிறது பதிவு.
ReplyDeleteஅரசாங்கம் விழித்துக்கொள்ளாது என்பது நமக்கு தெரிந்த விசயம்தானே.
நமக்கு நாமே திட்டத்தில் நம்மால் முடிந்ததை செய்தால்தான் உண்டு.
உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகும் வரை இது தொடரும்!
ReplyDeleteIntha nilaiyai matra ilaingargal vivasayaththaiyum oru velaiaga ninaikkavendum
ReplyDelete