Wednesday, March 18, 2009

என்ன செய்யப்போகிறோம் நண்பர்களே!

செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, சாதிவாரியான இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்க, சாதித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினாராம். அனைத்துச் சாதித் தலைவர்களும் தமது சமூக மக்களின் மொத்த எண்ணிக்கையைச் சொல்ல, கூட்டிப் பார்த்தபோது தமிழ்நாட்டு மக்கள்தொகை 20 கோடியாகத் தெரிந்ததாம். அவருக்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும், தான் தமிழ்நாட்டுக்கு மட்டும் முதலமைச்சரா அல்லது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், கூர்க்கம், தமிழகம், கேரளம் உள்ளடக்கிய பஞ்ச திராவிட நாட்டின் முதலமைச்சரா என.

சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் 1881-ல் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 1931-ல்! அவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில். சுதந்திர இந்தியாவில் அத்தகைய கணக்கெடுப்பு 1981-ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய மத்திய அமைச்சரவை, அத்தகைய கணக்கெடுப்பு, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக் கருதி, அந்த நடைமுறையை ஒழித்துக்கட்டியது.சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த மத்திய - மாநில அரசுகள், சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மக்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்கும் என்றும், சமத்துவத்தைக் கெடுக்கும் என்றும் கருதி, அதை ஊக்குவிக்கவில்லை. மனித மனங்களில் இருந்து சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் பறித்து எறிந்துவிட வேண்டும் என்று கருதிய தன்னலமற்ற, நேர்மையான, மதம், மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த, பாரத சமுதாயத்தைச் சமைத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட தேசத் தலைவர்களின் நிலைப்பாட்டையும் நாம் கேள்வி கேட்பதற்கு இல்லை.

கிராமத்தில் ஒருவனுக்குத் தென்னை மரங்களை முறித்து வண்டியில் ஏற்றி, பக்கத்து ஊரில் இருக்கும் செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தென்னை மரத்தில் ஏறி முதலில் கொண்டையைத் தறித்து, பின்பு மேல் மரம், நடு மரம், அடி மரம் எனத் தறித்து, வண்டியில் அடுக்கிப் பாரமேற்றுவதுதான் முறை. எதற்கு அந்தப்பாடு என யோசித்தவன், இரட்டைக் காளைகள் பூட்டிய பாரவண்டியை மரத்தின் தூரை ஒட்டி நிறுத்திவைத்து, மரத்தை மூட்டில் இருந்து வெட்ட ஆரம்பித்தான். மரம் முறிந்து விழுந்து, வண்டி உடைந்து நொறுங்கி, காளைகளும் செத்துப்போயின. நின்று யோசித்தவன் சொன்னான் - 'புத்தி மெத்த புத்தி, மாடு வண்டி சாடு சப்பண்டி' என்று. திரண்ட கருத்தாவது... 'செய்தது சரிதான். ஆனால், வண்டியும் மாடுகளும் பலமும் திறனும் அற்றவை' என்பது.

அதுபோல் ஆகிவிட்டது, நம் நாட்டில் சாதி ஒழிப்பின் கதை. ஒதுக்கீட்டுச் சட்டங்கள், கல்வி, உயர் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு யாவற்றுக்குமான பிரிவினை, சாதி அடிப்படையில் அமைந்தன. சாதி பற்றிய தகவல்களைக் கோராத அரசுப் படிவங்கள் இல்லை. தாலுக்கா அலுவல கங்கள், மெய்யாகவும் பொய்யாகவும் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவது என ஆயிற்று. தமது ரொட்டியில் எந்தப் பக்கம் வெண்ணெய் எனக் கண்ட சகல சாதியினரும் தமது சாதியைப் பிற்பட்டதாக, மிகவும் பிற்பட்டதாக, தாழ்த்தப்பட்டதாக, மிகவும் தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கக் கோரும் கோரிக்கைகள் வலுத்தன. சமூக அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் ஊசலாடியவர் பங்குகளை நகரத்துத் தந்திரசாலிகள் அபகரித்துக்கொள்ள ஆரம் பித்தனர். வாக்குப் பொறுக்கும் அரசியல் தலைமைகள் சாதி பிரித்து வேட்பாளர்களை நிறுத்தின. சாதித் தலைவர்கள் உருவாகி, அரசியல் தலைமையுடன் தரகு செய்ய ஆரம்பித்தனர். சாதித் தலைவர்கள் அரசி யல் தலைவர்களாக மாறினர்; சாதிச் சங்கங் கள் அரசியல் கட்சிகளாக உருமாறின.இது இந்திய சமுதாயம் மத, இன, சாதிப் பாகுபாடுகள் துறந்து மறுமலர்ச்சி பெற முயன்றதன் சோக வரலாறு.

முன்பு, தியாகராஜ பாகவதர் சினிமாவில் புகழ்பெற்றிருந்த காலத்தில், அவரது சமூகத் தினர் பாகவதர் கிராப் வைக்கவும், 'சொப் பன வாழ்வினில்' என்று பாடித் திரியவும் ஆரம்பித்தனர். மாண்புமிகு ஜெயில்சிங் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆன போது, தமிழ்நாடு எங்கும் விஸ்வ கர்மா சமூகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டினர். சமீப காலமாக வேளாளர் மாநாடு எனில் கப்பலோட்டிய தமிழன் படத் தையும், நாடார் மகாஜன சங்க ஊர் வலம் எனில் கர்மவீரர் படத்தையும், முக்குலத்தோர் பேரணி எனில் தேச விடுதலைத் தியாகி பசும்பொன் தேவர் படத்தையும், தலித் எழுச்சி மாநாடு எனில் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் படத்தையும் தாங்கிக் கோஷமிட்டுச் செல்வதைக் காண்கி றோம்.

மேதைகள், தியாகிகள், அரசியல் ஞானிகள், சமூகப் போராளிகள் என்பவர் அவர்தம் சாதித் தலைவர்களாக மட்டும் அடையாளம் காட்டப்படுவது, முன்னிறுத்தப்படுவது, சமகால இந்திய அரசியல் சூழலின் வீழ்ச்சி. மகாத்மா காந்தியைப் பனியா எனக் காண்பதைப் போல! தமிழ் ஈழ விடுதலைக்காகத் தனது உடல் எரித்து உயிர் துறந்த இளைய தோழனின் அஞ்சலிக்காக, கோவை மாநகரில் கறுப்பு மையில், கண்ணீர்த் துளிகளுடன் சுவரொட்டிகள் காணப்பட்டன. சுவரொட்டி வாசகத்தை, அதன் இலக்கணப் பிழைகளுடன் அவ்வாறே தருகிறேன்.

'அன்று தமிழ்மொழி போராட்டத்தில் உயிர் நீத்த தாளமுத்துவே- இன்று தமிழ் இனத்துக்காக உயிர் நீத்த முத்துக்குமரனே - என்றும் எப்போதும் தேசப் பற்றுக்காக முதல் இடத்தில் இருக்கும் நாடார் குல முத்துக்களே!' சுவரொட்டியை வாசிக்கும்போது, எனக்கு எதிர்கால இந்தியாவை எண்ண அச்சமாக இருந்தது. சாதியை ஒழிக்க, கலப்பு மணங்கள் ஊக்கு விக்கப்பட்டன. மத அடையாளங்களைத் துறக்க அறிவுறுத்தப்பட்டோம். நாமம் தரித்த நெற்றியை நக்கி அழித்தவர் உண்டு. நாமம் மறைவிடத்தில் இருந்தால் என்ன செய்வீர் எனக் கேட்டவர் உண்டு. சாலைகளின், பள்ளிகளின், அறநிலைகளின், நினைவாலயங்களின் சாதி ஒட்டுகள் அழிக்கப்பட்டன. ராஜகோபா லாச்சாரியார் ராஜாஜி ஆனார். ம.பொ.சிவ ஞானக் கிராமணியார், ம.பொ.சி ஆனார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.உ.சி ஆனார். காமராஜ நாடார், காமராஜ் ஆனார்.

பிற மாநில தேசத் தலைவர்கள் கோஷ், தாஸ், முன்ஷி, யாதவ், ஜாதவ், சிங், ரெட்டி, ஷெட்டி, மேனன், நாயர், பாட்டீல் எவரும் எங்கும் சாதி ஒட்டுக்களைத் துறவாததை நாம் பொருட்படுத்தவும் இல்லை.பள்ளிச் சான்றிதழ்களில் சுப்ரமணியப் பிள்ளையாக இருந்த நான் தன்னிச்சையாக சுப்ரமணியம் ஆனேன். 20 ஆண்டுகள் முன்பு, சாதிச் சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் முற்றுகை இடப்பட்டன. எனது பக்கத்து ஊர்க்காரன், கல்லூரியில் வகுப்புத் தோழன், ஒரே டெஸ்க்கில் இருந்தவன், கோவையில் தாசில்தாராக இருந்தான். என்னிடம் சொன்னான், ''மக்கா, ஒரு நாளைக்கு ஆபீஸூக்கு வா! நான் உன்னை MBC பிள்ளைமாரா ஆக்கிடுறேன்.'' எனக்குத் தெரிந்து, அன்று வெள்ளாளரில் 66 வகையினர் இருந்தனர். இன்று அது குட்டி போட்டுப் பெருகி இருக்கவும் கூடும். அவர்தம்முள் OC, BC, MBC எனப் பிரிவுகள் இருந்தன. பலரும் சில ஆயிரங்களில் இனமாற்றம் பெற்றும் இருந்தனர். எனது நண்பனின் புத்திமதியை, எனது பிள்ளைகளின் நலம் மறுத்து, ஆங்காரமாக நான் புறக்கணித்தேன். நோக்கம் எனது உயர்நிலை மேன்மையைக் காப்பாற்ற அல்ல, அடுத்தவன் உரிமையை அபகரிக்கலாகாது என்பதால். ஆனால், அப்படி அபகரித்தவன் கெட்டிக்காரன்.

எனது மாவட்டத்து வேளாளப் பேரவை, மாநில அமைச் சர்கள் சந்நிதானத்தில் எனக்கு ஒரு பரிசளித்துச் சிறப்புச் செய்ய அழைத்தபோதும், 'என்னால் வரவும் பெறவும் இயலாது' என்று கடிதம் எழுதினேன். இருந்தும்கூட, எனது 'ஊதுபத்தி' கதையை மேற்கோள் காட்டி, நாஞ்சில் நாடன் தனது சாதி வெறியை மீண்டும் நிரூபிக்கிறார் என்று எழுதிய மத, இன, சாதி அடையாளங்கள் துறந்த, மாசுமருவற்ற முற்போக்குத் திறனாய்வாளர் உண்டு. அந்தக் கதை அடங்கிய 'பேய்க்கொட்டு' எனும் எனது தொகுப்பு, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்குப் பாடமானபோது, துணைவேந்தருக்கும் கல்வி அமைச்சருக்கும் மனுக் கொடுத்தவர் உண்டு. உண்மை எனது நெஞ்சறியும், எனவே, ஈதொன்றும் எனக்குப் பொருட்டல்ல.

ஆனால், மேடைக்கு ஒன்றும் சுயத்துக்கு ஒன்றுமாக வாழும் இன்றைய அரசியல் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தலைமைகளின் சாதி வெறி நமக்குக் கவலை அளிக்கிறது. சாதி துறந்து இங்கு அரசியல் நடத்த வாய்ப்பே இல்லை என்பது யாவரும் அறிந்ததுதான். அரசியல் என்பது தொண்டோ, ஊழியமோ, தியாகமோ அல்ல! அது ஒரு தொழில், வியாபாரம். சிறு வழிப்பறி முதல் பெருங்கொள்ளை வரையிலான சமூக நீதி. எனவே, சகலச் சாதிகளும் தத்தம் அழுக்குப் படிந்த நகங்களையும், காரை அடைத்த பற்களை யும் கூராக்கி வைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றன.

எதிர்காலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்றப் பிரதிநிதித்துவங்கள் கோரப்படக்கூடும். அமைச்சர்கள், அதிகமாகத் தேனும் நெய்யும் ஒழுகும் இலா காக்கள் வேண்டப்படும். சாதி விகிதாசார அடிப்படையில் உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்டக் காவல் துறை அதிகாரிகள், ஆட்சியர், காவல் ஆணையர், கண்காணிப்பாளர்கள் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று வற்புறுத்தப் படலாம்.இல்லாவிட்டால், பயணிகளை வைத்துக்கொண்டே பேருந்துகள் கொளுத்தப்படலாம். அமைச்சுகள், வாரியங்கள் என பங்கு கேட்கலாம். பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறைதான் வேண்டும் என அடம்பிடிக்கலாம். அதற்கும் முன்மாதிரிகள் உண்டு நமது அரசியலில்.

இன்று வெறும் ஒரு லட்சத்துப் பன்னிரண்டாயிரம் மக்கள் தொகை கொண்ட இனம் ஒன்று மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அநியாயமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இனமாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டு வரலாம். இரண்டு சதவிகிதம் மக்கள்தொகை கொண்ட பிரிவு, நியாயமாகத் தமக்கு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால், எவர் புண்ணியத்தாலோ ஒருவர் மட்டுமே இருக்கிறோம் எனக் கறட்டு வழக்குப் பிடிக்கலாம். வங்கி மேலாளர்கள், சுங்க வரி, கலால் வரி, வருமான வரி அதிகாரிகளில் விகிதாசாரம் கோரலாம். சினிமா நாயக-நாயகியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரில் சாதிகள் பங்கு கேட்கலாம். எமது இனத்து மக்கள்தொகை கணக்குப்படி, ஒரு திரைப்படத்தில் எமக்கு மூன்று கற்பழிப்புக் காட்சிகள் வேண்டும் எனலாம்.

ஐந்து சதவிகிதம், பத்து சதவிகித ஜனத்தொகைச் சாதிகள் தமது பங்குகளைச் சுமந்து கைவீசி, தெம்மாங்கு பாடி வழி நடப்பார்கள். ஆனால், இந்த மண்ணில் வெறும் 300 பேர் முதல் 30,000 பேர் வரை மக்கள்தொகை கொண்ட எண்ணற்ற சாதிகள் உண்டு. அவர்கள் தமது வாழ்க்கைப் போரை நகங்களற்றும் பற்களற்றும் எங்ஙனம் நடத்த இயலும்?

இன்றும் தாழ்த்தப்பட்டவருக்கு முடி வெட்ட மறுக்கும் கிராமங்கள் உண்டு. மாட்டு வண்டியில் போனால், வண்டி ஓட்டுகிற தலித் இறங்கி நடந்து சாதி இந்துக்களின் தெருக்களைக் கடக்கும் கிராமங்கள் உண்டு. சாயாக் கடைகளில் தனிக் குவளைகள் உண்டு. கோட்டைப்புரங்கள் உண்டு. ஆதிக்கச் சாதி எதுவெனக் கண்டு, தேர்ந்து, உசிதம் போலக் கட்டுரைகள் எழுதும் அறிவுஜீவிகள் உண்டு.

வாக்குக் கொள்ளையையும், தேர்தல் வெற்றியை யும், அதிகாரத்தையும், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் கோடிகளையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் குறிவைத்துத் திரும்பி நிற்கிறபோது, சாதி அமைப்பு கள், பதவி எனும் குருதி வாசனையில் நாவூறி, தமது அரசியல் பங்குகளைப் பறித்துக்கொள்ள அணி திரள்கின்றன. ஏற்கெனவே இங்கு ஜனநாயகம் என்பது பணநாயகம். இனி அது பண - இன நாயக மாகப் பரிணமிக்கும்.

இவ்விதச் சாதிச் சண்டைகளில் ஆள் பலமும், பண பலமும், அரசியல் பலமும் இல்லாத பல நூறு எளிய சாதிகள், எப்போதும் போல உண்டு கொழுத்து மகிழ்ந்தவர் வீசும் எச்சில் இலைகளுக்காகக் காத்துக்கிடக்கும். அவர்களுக்குத் தொண்டூழியம் செய்ய எந்தக் கந்தர்வனும் மண்ணில் கால் பாவாமல் நடந்து வர மாட்டான்.

மக்களைத் தம்முள் பிரித்து ஆளும் சூழ்ச்சியின் சுழற்காற்று மையத்தில் நாடு சகல திசைகளிலும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறது. ராமலிங்க வள்ளலின், மகாத்மா காந்தியின், தாதா சாகேப் அம்பேத்கரின், மகாத்மா ஃபுலேயின், பாபா ஆம்தே யின், பெரியாரின் நோக்கங்களுக்கு எதிர் திசையிலான பயணத்தை நாம் தொடங்கியாயிற்று. திரும்புதல் என்பதும் சமீபத்தில் சாத்தியம் இல்லை.

தன் படை வெட்டிச் சாதலும், சாதிகளுக்கு இடையேயான ரத்தப் பெருக்கும் அடிவானில் விஷ மேகமாகப் பொழியத் திரண்டுகொண்டு இருப்பதை கண்ணுள்ளோர் காணலாம். அதிலிருந்து தப்பிக்க நோவாவின் கப்பல் வருமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே விவிலியத்தில் எச்சரிக்கை வாசகம் ஒன்று உண்டு - 'God sent nova the rainbow sign. No more water, the fire next time!'

என்ன செய்யப்போகிறோம் நண்பர்களே!

- நாஞ்சில் நாடன்

நன்றி : விகடன்

 

2 comments:

 1. Hi,

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

  ReplyDelete
 2. How can anyone disagree with your views? Except Vanniayar,Mukkulathor,Nadar,Pallar,Parayar,Kongu vellalar,Adidravidar,yathavar do i need to go on?Even God and Periyar could not help us.

  ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com