Friday, April 10, 2009

அயன் - விகடன் விமர்சனம்

திருட்டு விசிடி, தங்க பிஸ்கட், வைரம் என்று சர்வதேச அளவிலான கடத்தல் நிபுணராகி வாழ்க்கையைச் சாகசமாகக் கடத்துபவனே அயன்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தாலும், கடத்தல் சாகசங்கள் மீதுதான் சூர்யாவுக்கு அதீத ஆர்வம். ஆப்பிரிக்காவின் காங்கோ வரை வேர் பரப்பிக் கிளை விரித்து வைரங்களைக் கடத்தும் பிரபுவிடம், விசுவாச ஊழியராக இருக்கிறார். பிரபுவுக்கு எதிரியான வில்லன் அவருடைய கடத்தல் கம்பெனியைக் காலி செய்ய அடுத்தடுத்து சதித் திட்டங்கள் தீட்டுகிறார். அதிலிருந்து பிரபுவும் சூர்யாவும் தப்பிக்கிறார்களா என்பது கிளைமாக்ஸ். கடத்தல், பிளாக் மார்க்கெட் உலகின் வெளிச்சம் படாத பக்கங்களைப் பிடித்து பரபர, விறுவிறு ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

குறும்புக் காதலன், சின்ஸியர் ஸ்மக்ளர், தோள் கொடுக்கும் தோழன் என அத்தனை அம்சங்களிலும் 'பார்யா' என்று அசரவைக்கிறார் சூர்யா. பீட்டர் இங்கிலீஷ் பீலா, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கிழித்த ஷூவைக் கேட்டு அடம்பண்ணுவது, ஆக்ஷன் காட்சிகளில் பொளேரெனப் பொளப்பது என ஸ்க்ரீனில் தட்டுப்படும்போதெல்லாம் தடாலடிதான். காட்ஃபாதர் வேடத்தில் பிரபு அத்தனை கச்சிதம். ஆவேசமான சூர்யாவை அடக்குவதும், போலீஸ் ஸ்டேஷனில் அவரே வெடித்துத் துடிப்பதுமாக, தான் நடிப்பிலும் சீனியர் என்பதை நிரூபிக்கிறார். கட்டடங்கள், ஜன்னல்கள், கூரைகள், நெருக்கடியான வீதிகளில் ஆள் மாற்றி ஆள் மாற்றி வைரம் கைமாறிக்கொண்டே இருக்க, ஒவ்வொருவரையும் விடாமல் சூர்யா தொட்டுத் துரத்திப் பிடிக்கும் காங்கோ ரேஸிங் சண்டைக் காட்சி நம்மையே மூச்சு வாங்க வைக்கிறது. 'கடவுள் பாதி, மிருகம் பாதி' ஜெகன், 'நண்பன் பாதி, துரோகி பாதி'யாகத் தூள் கிளப்பியிருக்கிறார். அழகிய பார்பி பொம்மை ஷோ கேஸில் 'சும்மாச்சுக்கும்' இடம் பிடித்திருப்பது போல, தமன்னா படத்தில் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களிலாவது அம்மணி நடிக்கலாம்.

விழி மூடி யோசித்தால்' பாடலில் விழி மூடி ரசிக்க வைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், 'நெஞ்சே நெஞ்சே... நீ எங்கே?' என்று உள்ளுக்குள் கிடார் மீட்டுகிறார். ஆனால், காட்சிகளுக்குச் சம்பந்தமில்லாத அவரது பின்னணி இசை படுத்தியெடுக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாகப் பலப் பல நாடுகளுக்குக் கதை பயணித்தாலும் அது திணிப்பாகத் தெரியாமல் கதைப் போக்கோடு இணைந்து பயணிக்கிறது. எம்.எஸ்.பிரபுவின் கேமரா காங்கோ, சென்னை, மலேசியா என்று ஏரியாக்களின் அழகை ஒரிஜினாலிட்டி கெடாமல் சுட்டு வந்திருக்கிறது. சேஸிங் காட்சிகள், வைரங்களை எடுக்க வயிற்றைக் கிழிப்பது என ஆங்காங்கே உலக சினிமா தட்டுப்பட்டாலும், உள்ளூர் கலருடன் ஒரு கடத்தல் சேஸிங் கதையை டெக்னிக்கலாக விவரித்திருப்பது படத்தின் சுவாரஸ்ய பிளஸ்.

ஆனால், ஒரு அழுக்கு குடோன், மூன்று இளைஞர்கள், ஒற்றை கார் வைத்துக்கொண்டு பிரபு கோடிகளில் டீலிங் செய்வது கொஞ்சம் பலமாகவே உதைக்கிறது. சூர்யா வுக்கும் தன் தங்கை தமன்னாவுக்கும் இடையேயான சந்தோஷ சல்லாபங்களுக்கு ஜெகன் மெனக்கெடுவது, சூர்யா ஜெகனின் வீட்டை, 'பலான வீடோ?' என்று சந்தேகப்படும்போது, 'அவன் உன்னை 'அயிட்டம்'னு நினைச்சுட்டான்டி!' என்று ஜெகன் சிரித்து ரசிப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் சாரே!


இரண்டாம் பகுதி முழுக்க அம்மா அன்பு, ஜெகன் கொலை, வில்லனின் துரத்தல், வில்லனின் மரணம் என பாதி ரீல் ரீ-வைண்டிங்லேயே ஓடுகிறதே! இத்தனை ஆக்ஷன் கதைக்குத் தேவையான டெம்போவை ஒரு பவர்ஃபுல் வில்லன்தான் முழுமையாக்க முடியும். ஆனால், வில்லனாக வரும் ஆகாஷ் தீப் தனது தொழில் எதிரிகளான பிரபு - சூர்யாவுக்கு டார்ச்சர் கொடுப்பதைக் காட்டிலும் நம்மையே அதிகம் கொல்கிறார். என்னதான் சூர்யா மாஸ்டர் மைண்டாக இருந்தாலும் கஸ்டம்ஸ் அதிகாரியான பொன்வண்ணன் அவருக்காகக் கை கட்டி காத்திருந்து அவரது உத்தரவுகளுக்கு 'ஆகட்டும் எஜமான்!' என்று செயல்படுவதும் டூ மச். (சுங்கத் துறை அதிகாரிகள் சங்கம் வைத்திருந்தால் சங்கடம்தான்!) உலகின் சகல மூலைக்கும் சவாரி அடிக்கிற ஒருவன் தம்மாத்தூண்டு வீட்டில் வசிப்பதும், அவன் அம்மா பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பதும்... போங்க, ரொம்பத்தான் குறும்பு!

காட்சிகளை லாஜிக் மீறாமலும் புத்திசாலித் தனமாகவும் அமைக்க மெனக்கெட்டு இருப்பதற்குப் பாராட்டுக்கள். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் ஓவர்டோஸ் அலர்ஜி ஏற்படுத்துவதுதான் அயனின் பின்பாதி 'பயன்'!

 நன்றி : ஆ.வி

1 comment:

  1. திருட்டு விசிடி கிடைத்தால் பார்க்கலாம்!! ஏனெனில் சன் டி வி க்கு லாபம் கிடைக்கக் கூடாது என்று எழுதவில்லையா ?

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com