சச்சினின் கிரிக்கெட் போலவே அவருடைய குடும்பப் பாசமும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள். பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).
சச்சினைக் கண்டாலே அலறும் உலகப் பந்துவீச்சாளர்கள் அவருடைய மறுபக்கத்தை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள். கிரிக்கெட்டை தவிர்த்து சச்சினின குடும்பப் பிணைப்பைப் பற்றி அறியும்போது நமக்கும் ஆச்சர்யம் வருகிறது.கிரிக்கெட் நுணுக்கங்களைப் போல குடும்ப நுணுக்கங்களான அன்பு, பாசம், அக்கறை, நகைச்சுவை எல்லாம் கலந்து கட்டியவர் சச்சின்.பேட்டால் பந்தை அடித்து ரன்களைக் குவிக்கும் சச்சின், அன்பால் மனங்களை அடித்து அதே அன்பை நிறையவே பெறுபவர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,
”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.
”என்னுடைய மன உறுதிக்கு அஞ்சலிதான் தூண். நான் தொய்வடையும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள் அவள். அதன் பிறகு என்னுடைய அம்மா. இவர்கள் இருவரும்தான் என் வாழ்க்கையின் பெரும்பான்மை பகுதியை ஆள்பவர்கள். மேலும் தற்போது அந்த குரூப்பில் என் குட்டி மகள் சாராவும் சேர்ந்துவிட்டாள்” என்றார்.சச்சின் தன்னுடைய பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளில் உச்சி முகர்வது மகளும் மகனும் தங்கள் கைகளால் செய்து அனுப்பிய வாழ்த்து அட்டைகளைத்தான்.
”அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்க்கும்போது தந்தையுடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதேநேரம் மனைவியின் வாழ்த்தும் எனக்கு முக்கியமானது” என்கிறார் சச்சின்.அவருடையப் பிறந்தநாளின்போது நடந்த மறக்க முடியாத ஒன்றைப் பற்றி கேட்டால், ”1998 ஏப்ரல் 24ஆம் தேதி சார்ஜாவில் நடந்த ட்ரைஆங்குலர் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு உதவியது” என்று நினைவுகூர்கிறார்.
உங்கள் எதிர்கால கனவு என்ன என்றால், ”நம்மை மறந்து உறங்கும் போதுதானே கனவு வரும்?” என்று கலாய்ப்பவர், ”உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்று சொல்கிறார்.சச்சின் சகலகலா வல்லவர்தான். பின்னே, என்னதான் மாபெரும் சாதனையாளராக இருந்தாலும் வீட்டில் பொண்டாட்டி மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆம்பளைக்கு தனித்தகுதி வேண்டாமா என்ன?
நன்றி : தமிழ்வாணன்
No comments:
Post a Comment