கட்டணக் கழிப்பறைகள் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. ஒரு ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால்,ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பதற்கான நோய்களை வாங்கி வரலாம். அப்படியிருந்தும், துர்நாற்றம் பிடித்த கழிவறைகள் மொத்தத் தையும் அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். 'ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரும் அவர்கள், காசு வரும் என்பதற்காக கழிவறைகளையே ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்களே... அவர்களுக்கா நம்முடைய ஓட்டு?' என்பதுதான் எங்கள் பிரசாரம். பல்வேறு பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எங்களோடு களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் இந்தக் கோரிக்கையை கையிலெடுத்தால் பலன் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னதும் அவர்கள்தான். சென்னையில் மட்டுமே இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். ஒருவேளை அரசியல் கட்சிகள் இது குறித்து செவிசாய்க்கவில்லை என்றால், எங்கள் வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரும்!'' என்றார்.
'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது.
சுகாதாரமற்ற கழிவறையைப் பயன்படுத்தும் மாணவிகளுக்கு முதலில் சிறுநீரகத் தடத் தொற்று ஏற்பட்டு, அது கருப்பாதைக்குப் பரவி, வெள்ளைப்படுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. சிலருக்கு மலட்டுத் தன்மையும் உண்டாகிறது. மேலும், மாணவிகளின் இயல்பான உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இது நோஞ்சானாக்குகிறது. ஆக, 'ஒரு கழிவறை, நேரடியாக ஒரு பெண்ணின் கல்வி, உடல்நலம் ஆகியவற்றை பாதிப்பதோடு அவளுடைய அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது' என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், எட்டு லட்சியங்கள் அடங்கிய 'புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்குகள்' ஒன்றையும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதன்படி, 2015-ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து நாடுகளும் இந்த லட்சியங்களை அடைந்திருக்கவேண்டும். அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில், ஏழு லட்சியங்கள் பொது சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டவை.'ஒருவருக்கு வயிற்றுப் போக்கு. ஒரு வாரம் வேலைக்குப் போகவில்லை. கந்துவட்டிக்குக் கடன் வாங்குகிறார். கடனை அடைப்பதற்காக கிராமத்தை காலி செய்துவிட்டு நகரத்தில், பிளாட்பாரத்தில் குடியேறுகிறார். இந்த நிகழ்வுகள், பொது சுகாதாரம் இல்லாததால் ஒருவர் வறுமைக்குத் தள்ளப்பட்டதையே காட்டுகிறது. இது முதல் லட்சியமான 'வறுமை ஒழிப்பை' காலி செய்கிறது. இரண்டாவது லட்சியம், 'அனைவருக்கும் கல்வி' என்பது. கடந்த மாதம் மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர். கல்வியே கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது லட்சியமான 'பெண்கள் மேம்பாடு'ம் நிறைவேறாமல் இருக்கிறது. மேலும், சுகாதாரக் குறைவால் இந்தியாவில் இதுவரை 15 லட்சம் சிசு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது நான்காவது லட்சியமான 'சிசு மரணத் தடுப்பு'க்கு எதிரானது. கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேறிவிடுகிறது. இது ஐந்தாவது லட்சியமான 'கர்ப்ப கால ஆரோக்கியத்தை' பாதிக்கிறது. இப்படியாக பொது சுகாதாரம் எட்டப்படாததால்... அனைத்து லட்சியங்களும் நிறைவேறாமல் கிடக்கின்றன. 'நிர்மல் கிராம் புரஸ்கார்' என்னும் விருதை, திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 15 ஆயிரம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் பல கிராமங்கள் சுத்தமாகியிருக்கிறது. ஆனால், நகர சுகாதாரம் படுமோசமாக உள்ளது. எனவே, இதேபோன்ற விருதை நகர்ப்புறங்களுக்கும் வழங்கினால், சென்னை மாநகரமும் சுத்தமாகும். அந்த வகையில், கழிவறையைக் கட்டிக்கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை!'' என்றார்.
சுகாதாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாடுகளே தொற்று நோய்களின் வீரியம் கண்டு கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகமிக அதிகம். அப்படியிருக்க, மிகமிக அடிப்படையான விஷயங்களில் மளமளவென்று அடியெடுத்து வைத்து நாம் போவதுதானே புத்திசாலித்தனம்!
நன்றி : ஜூ வி
நல்லா இருக்கு
ReplyDelete