'நம்ம பசங்க இவங்க!' என்று உச்சி முகர்ந்து உலகத்துக்குச் சொல்ல, சமகால வரலாற்றில் தமிழில் ஒரு சிறுவர் சினிமா!
முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாண்டிராஜ். தியேட்டரில் அந்தப் பசங்களுடனேயே பயணித்துப் பிரிய மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் குழந்தைகளின் 'தேங்க்ஸ்' மொத்தமும் உங்களுக்கே உங்களுக்கு!சதா சண்டைக் கோழிகளாகப் பிரிந்து நின்று முட்டி மோதி மூக்குடைக்கும் குறும்புப் 'பசங்க' கதை. லிட்டில் டெரரிஸ்ட் ஜீவா. அப்பாவே வாத்தியாராக இருப்பதால், ஜீவாவின் அட்டகாசங்கள் ஊரையே உலுக்கியெடுக்கின்றன. கூடவே, கும்மாளமடிக்கும் சக ஜபர்தஸ்துகள் பக்கடா மற்றும் குட்டிமணி. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்கிறான் அன்புக்கரசு. ஆறாம் வகுப்பிலேயே 'அன்புக்கரசு ஐ.ஏ.எஸ்' என்று போட்டுக் கொள்ளும் ஸ்டூடன்ட் நம்பர் ஒன். முதல் நாளே அன்புக்கும் ஜீவாவுக்கும் மோதல். எதிரெதிர் வீட்டில் இருக்கும் இருவரின் குடும்பங்களும் தெருச் சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு வினையாகிறது விளை யாட்டுச் சண்டை. இவர்களுக்கிடையே மோதல்என்றால், அன்புவின் எல்.ஐ.சி. சித்தப்பாவுக்கும் ஜீவாவின் பால்வாடி டீச்சர் அக்காவுக்கும் காதல். காதல் ஜோடி இணையத் துடிக்க, மோதல் பசங்க பிரிக்கத் துடிக்க... யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக் கதை!
'தோளில் கை போட்டால் குட்டையாகிவிடுவேன்' என்கிற பயம், 'இந்த அடியை நாளைக்கு வரைக்கும் மறக்காதே' என்று அன்பைச் செல்ல அடியாக வெளிப்படுத்தும் பிரியம், 'அது எப்படிடா ஒருத்தனுக்கு ஒண்ணுக்கு வந்தா எல்லாத்துக்கும் வருது?' என்கிற சந்தேகம் என... பால்ய காலத்தின் பக்கங்களை ஜாலியாகப் புரட்டும் கதைநான் தயிர்சாதம்', 'நான் சர்க்கரைப் பொங்கல்', 'நான் புளியோதரை' என்று எதிரி வீட்டு முற்றத்தை நாசம் பண்ணும் ஜீவா அண்ட் கோ ஒரு பக்கம், இல்லாத பைக்கைக் கற்பனை யாக ஓட்டிக் கனவு காணும் அன்புக்கரசு இன்னொரு பக்கம் என அறிமுகக் காட்சிகளும் அவர்களுக்கான 'ஓப்பனிங் ஸாங்'கும் அசத்தல்.
கைத்தட்டலுக்கும் பாராட்டுக்கும் ஏங்கும் அன்புக்கரசு கேரக்டர் தமிழ் சினிமாவுக்கே புதிது. 'பெர்ஃபெக்ட் ஸ்டூடன்ட்' கேரக்டரில் கிஷோர் பக்கா பாந்தம். சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அப்பா - அம்மாவைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போதும், வம்புக்கார ஜீவாவைச் சரிக்குச் சரி நின்று சமாளிக்கும்போதும் கிஷோரின் கண்களில் அத்தனை எக்ஸ் பிரஷன்கள்!
'குழந்தை வில்லன்' ஜீவாவாக ராம். அரசுப் பள்ளி வாத்தியார் பையன்களுக்கே இருக்கும் இயல்பான திமிர். வகுப்பில் தன்னைக் கண்டிக்கும் அப்பாவை, 'அவனை விட்டுட்டு என்னையத் திட்ற... இரு, அம்மாகிட்ட சொல்றேன்!' என்று எகிறும்போதும், அதே அப்பாவிடம் 'சிகரெட்டை விட்ருப்பா... எல்லாம் உன்னைக் கிண்டல் பண்றாங்க' என்று வரம் வாங்கும்போதும் தேர்ந்த நடிப்பு. தன் அப்பா, அன்புக்கரசுவைப் பாராட்டும்போதெல்லாம் ஜீவா முகத்தில் தெரிவது அக்னி நட்சத்திரச் சூடு!
ஜீவாவின் கைத்தடிகளாக வருகிற பக்கடா (பாண்டியன்), குட்டிமணி(முருகேஷ்) இருவரும் காªமடி ரவுடிகள். 'ஜீவா கோபமாயிட்டான். அவன் பணக் காரன்டா. சட்டைப் பையைக் கிழிச்சுக்குவான்டா!' என்று ஜீவாவை உசுப்பேத்தி, சில்லறைகளைச் சிதற வைக்கிற பக்கடாவின் ஐடியாக்கள் அத்தனையும் சிரிப்பு பாஸ்பரஸ். பக்கடா ஏத்திவிட... 'ம்ம்' என்று அதற்கு ஜால்ரா வாசிக்கிற குட்டிமணியின் பக்க வாத்தியம் அவ்வளவு அழகு. 'அம்மா... குஞ்சுமணி வெளியே வந்திருச்சு!' என்று ஓட்டை ஜட்டியுடன் அறிமுகமாகும் 'புஜ்ஜிமா' கார்த்திக் ராஜா குறும்பு ஹைக்கூ. இரு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போடும்போது, வாத்தியாரைப் பார்த்துக் 'கொன்னுருவேன்' என்று பிஞ்சு விரல் காட்டுவதும், பெண் குழந்தைகளிடம் அன்பு காட்டி ஆண் குழந்தைகளை அடித்துவைத்து 'எப்பூடி?' என்று கேள்வி கேட்டும், படம் முழுக்க ரகளை செய்கிறான். ஜீவாவின் அத்தைப் பெண் புவனேஸ்வரியாக வரும் தாரிணியின் கண்களில் கள்ளமில்லா சில்மிஷ காந்தம்!
'இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு?' என்று சதா மொபைல் மொக்கையில் பிஸியாகத் திரியும் எல்.ஐ.சி. ஏஜென்ட்டாக வரும் விமல், அறிமுகமா? ஆச்சர்யப்படுத்துகிறார். 'ஒரு பாலிஸிகூடக் கிடைக்கலை. எப்படியும் உங்கப்பா நம்ம காதலைச் சேர்த்துவைக்க மாட்டாரு. பழகுன பழக்கத்துக்கு ஒரு பாலிஸி யாவது போடேன்!' என்று காதலியிடமே கையெழுத்துக் கேட்பதில், டிரேட் மார்க் தமிழக விடலையைக் கண் முன் நிறுத்துகிறார். அட, 'சரோஜா' வேகாவா இது? பால்வாடியில் தூங்கி வழியும் சோப்ளாங்கி டீச்சராக, 'நீங்க என்னைப் பாராட்டுறீங்களா... இல்லை, ஓட்டுறீங்களா?' என்று குழம்புகிற அசட்டு அழகு ஃபிகராகப் பின்னியிருக்கிறார். 'கேணப் பய! கிறுக்கச்சி மாதிரி என்னைத் தனியாப் பேசவெச்சிட்டானே' என்று புலம்புவதும், புருவ நெளிவுசுளிவுகளிலேயே கதை பேசுவதுமாக... வேகா-ஆஹா!
செல்போன்களையே காதலுக்கு உதவும் உருப்படிகளாகக் காட்சிப்படுத்தியிருப்பது லவ்லி. 'மாமோய்! நீங்க எங்க இருக்க்க்க்க்க்கீங்க?' என்று ஆரம்பித்து, விதவிதமாகக் கதறும் ரிங்டோன்களையே காதல் காட்சிகளுக் குப் பின்னணி இசையாகச் சேர்த்திருப்பது ரசனை.ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் சொக்கலிங்கத்துக்கு (ஜெயப்பிரகாஷ்), ரோல்மாடல் வாத்தியார் கேரக்டர். தேவையான பாவனைகளைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அன்புக்கரசுவின் அப்பாவாக வரும் சிவக்குமாரும், அம்மாவாக வரும் செந்திகுமாரியும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான படியிலிருக்கும் வர்க்கங்களின் பெற்றோர்களைக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறார்கள்.
ஒரு நடுவாந்தர நகரம், அதன் மனிதர்கள், அதன் வருட முழுமைக்குமான இயக்கங்களை (தீபாவளித் தள்ளுபடி வண்டி, 'சார், கொஞ்சம் ஓரமா நின்னு சண்டை போடுங்க சார்' என்று அறிவித்து நகர்ந்து செல்வது வரை... பிரமாதம்!) அச்சு அசலாகப் படியெடுத்திருப்பதில், கலை இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சரிசம சபாஷ்! பருவங்களாக நகர்கிற கதையில் மழை, வெயில், வசந்தம் என்று கால நிலைகளைக் கச்சிதக் காட்சிகளாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில், 'அன்பாலே அழகாகும் வீடு...' மனதைப் பஞ்சாக இழையவைக்கிறது. ஒரு சின்ன நகரத்தில் இப்படி ஒரு ஜோடி ஸ்கூட்டியில் வளைய வரும் விஷயம் வீடு வந்து சேர எத்தனை நாளாகும்? முதல் பாதியில் வேடிக்கை வினோதக் காட்சிகளே தொடர்வது, ட்விஸ்ட் அண்ட் டர்ன் எதிர்பார்க்கும் யுகத்தில், கொஞ்சம் நீளமே. அன்புவின் அப்பா குடம் தயாரிக்கும் ஃபேக்டரி ஆரம்பிக்கும்போதே கணவன்-மனைவி இருவரும் ராசியாகிவிடுகிறார்கள். அதற்கடுத்தும்விவாகரத்து அளவுக்கு வரும் குடும்பச் சண்டையும், சொக்கலிங்க வாத்தியாரின் அட்வைஸூம் திணிக்கப்பட்ட உணர்வையே தருகின்றன. படத்தின் பெரும்பான்மைக் காட்சிகளில் இல்லாத சினிமாத்தனம், அன்புக்கு ஆக்ஸிடென்ட் ஆவதில் இருந்து எட்டிப் பார்த்து, 'உள்ளேன் ஐயா' சொல்கிறது.பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இருவேறு உலகங்களை இணைத்து அத்தனை நல்ல விஷயங்களையும் சொல்கின்றன ஒவ்வொரு காட்சியும் வசனமும். பஞ்ச் பேசி, பறந்து அடித்து, ரிப்பீட் கதைகளால் ரிவிட் அடிக்கும் அத்தனை ஆல் கிளாஸ் மாஸ் ஹீரோக்களுக்கும் அலாரம் அடிக்கிறார்கள் இந்தக் குட்டிப் 'பசங்க. நன்றி : விகடன்
உங்க பகிர்தலுக்கு நன்றி சகா
ReplyDeleteexcellent!
ReplyDeletePasanga ellarum parka vendiya padam
ReplyDelete