Wednesday, February 25, 2009

மும்பை குப்பம் - சிறு பார்வை!

ஸ்லம் டாக் படம் வெளி வந்ததிலிருந்து பல சர்ச்சைகளை கிளப்பியது மும்பை குப்பம் பற்றிய காட்சியமைப்புகள். குப்பத்து மக்களின் வாழ்கையை மிக கேவலமாக காட்டியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அனைவரிடமும் இருந்து வந்தது. இது தொடர்பாக பல போராட்டங்கள், வழக்குகள் என்று பல எதிர்ப்புகள் மும்பை வாசிகளிடமிருந்தும் , குப்பத்து வாசிகளிடமிருந்தும் வந்தன.ஆனால் படம் பார்த்த சிலருக்கு இன்னொரு கருத்தும் இருந்தது. "உள்ளதை தானே காட்டியுள்ளனர். இந்தியாவில் இது போல பகுதிகளும் இருக்கிறதே! உண்மையை சொன்னால் கசப்பாக இருக்கிறது. இதை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் இல்லை என்று நம்மால் நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது".- இப்படி சொல்பவர்களையும் மறுத்து பேச முடியாது. ஆக, உண்மை நிலை என்ன என்பதை அங்கு உள்ளவர்கள் தான் சொல்ல வேண்டும். மும்பை தாரவி குப்பத்து வாசியான , சமூக சேவைக்காக 'மகசேசே' விருது பெற்றவருமான ஜோக்கிங் அற்புதம் எனும் தமிழர் ஜுனியர் விகடனுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அவருடைய பேட்டி கீழே: 

''மும்பையில் குப்பங்கள் உருவானது எப்படி?''
''இதற்குக் காரணமே தமிழர்கள்தான். 1938-ல் ஒரு முறை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மாவட்டத்தை விட்டே வெளியேறி, மகாராஷ்டிரா வந்தனர். இதில் பாதிப் பேர் சூரத்திலும் மீதிப் பேர் மும்பை நகரின் வெளிப்புறத்திலும் குடிசைகள் போட்டுத் தங்கினர். அப்போது காடாக இருந்த இங்கு, மலை சாதி மக்களுக்காக தாரா தேவி கோயில் இருந்தது. அதுவே, இந்தப் பகுதியின் பெயரானது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி, தாராவி என்று ஆனது. மற்ற மாநிலத்தவர்களும் தமிழர்களுடன் சேர்ந்துகொள்ள, ஆசியாவின் மிகப் பெரிய குப்பமாகி விட்டது தாராவி. சுமார் 520 ஏக்கர் பரப்புள்ள இங்கே 93 பகுதிகளைக் கொண்ட 3,600 குப்பங்கள் உள்ளன!'

''தாராவியை வைத்து எடுக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் பற்றி...''
''எங்கள் குப்பங்களைப் பற்றி அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்பட்டமான பொய்! குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதது போல சித்திரிக்கப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. 2001-ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தவர், தாராவி குப்பத்துக்காரர்தான். தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனராக இருக்கும் எஸ்.எஸ்.ஷிண்டே உட்படப் பலர்

இந்தக் குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தற்போதுகூட இங்கு 46 எம்.பி.பி.எஸ், 38 இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். மும்பையில் தென் இந்திய உணவு வகை களுக்குப் பிரசித்தி பெற்ற 'முத்துசாமி கேட்டரர்ஸ்' இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் போல நியாயமாக, உழைத்துச் சம்பாதித்த ஏராளமான கோடீஸ்வரர்கள் இந்தக் குப்பத்துக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே, மீரா நாயர் தன்னுடைய 'சலாம் பாம்பே' படத்தில் மும்பைக் குப்பங்களைத் தவறாகச் சித்திரித்தார். அதையும் தாராவி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அது போலவே இந்தப் படத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.''

''படங்களில் காட்டப்படுவது போல் இங்கு உண்மை யிலேயே வறுமை நிலவுகிறதா?''
''நாங்கள் வறுமையாக இருப்பதாகச் சொல்லி உலக அளவில் நன்றாகக் கல்லா கட்டிவிட்டது அந்தப் படக்குழு. இந்தியாவிலேயே விலை குறைவான உணவு தாராவியில்தான் கிடைக்கும். வெறும் 15 ரூபாயில் மூன்று வேளையும் பசியாறிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் இட்லிகள் இங்கு தயாராகி, மும்பை முழுவதும் சப்ளையாகிறது. ஒரு நாய்கூட இங்கே பட்டினியால் செத்ததில்லை. இதனால்தான், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இருந்து இன்றும் கூடப் பலர் தாராவிக்கு வந்து தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். பசி, பட்டினியில் அடிபடவா இங்கே வருவார்கள்? சொல்லப் போனால், மும்பைவாசியினர் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தக் குப்பங்களில்தான் கிடைக்கிறது!''

''ஆனால், தாராவியில் இன்னும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படும் சூழல் நிலவுகிறதே?''
''இங்கே 10 வயது முதல் குப்பை பொறுக்கி விற்ற முகம்மது அலி என்ற சிறுவன், இன்று தாராவியின் கோடீஸ்வரர்களில் ஒருவர். இன்றும் சுமார் 300 குடும்பங்கள், அந்தக் குப்பைகளில் கிடைத்தவற்றை விற்று தினம் ரூபாய் 300 முதல் 1,000 வரை சம்பாதிக்கிறார்கள். அதே போல், இங்குள்ள பழைய பொருட்கள் சந்தையில் வாங்கப்படும் பிளாஸ்டிக்குகளை வைத்து, பி.வி.சி. பைப்புகளுக்கான மூலப் பொருட்கள் ஏராளமாகத் தயாராகின்றன. இது தடைப்பட்டால் பொருட்கள் கிடைக்காமல், இந்தியா முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும். அறுவை சிகிச்சையின்போது தையல் போடப் பயன்படும் ஒரு வகை நூல், இதே தாராவியிலிருந்துதான் 40 நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதனால் குப்பையைக் கூட தொழிலாக மாற்றிக் காட்டிய அதிசய பூமி இது!'

"மும்பையின் கிரிமினல்கள் குப்பங்களிலிருந்துதான் உருவாவது போல் படத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தோற்றம் உண்மையானதா?''
''ஆரம்பத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இங்கே கிரிமினல்கள் உருவானது உண்மைதான். அதிலும், மும்பை குப்பங்களில் தொடக்க காலத்தில் தமிழர்கள் இருந்ததால், பிரபல தாதாக்களாக உருவெடுத்தவர்கள் பலரும் தமிழர்களாகவே இருந்தார்கள். ஆனால், இந்த நிலைமை முற்றிலுமாக மாறிப் பல வருடங்களாகி விட்டன. இப்போது இங்கு வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. அதனால், மும்பை நகரைவிட இங்கே கிரிமினல்கள் குறைவுதான்!''

''இந்தக் குடிசைகள் மாற ஏதாவது வழிகள் உண்டா?''
''மகாராஷ்டிர அரசு பன்னாட்டு வங்கியுடன் இணைந்து 'தாராவி புனரமைப்புத் திட்ட'த்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கோடிக்கணக்கில் உயர்ந்துவிட்ட தாராவியின் ஒரு பகுதி நிலங்களை தொழில் அதிபர்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகைகளில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, அனைவருக்கும் மறு பகுதியில் இடம் தரும் திட்டம் நடந்து வருகிறது. தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மீண்டும் அடுத்த இரு வருடங்களில் தொடங்கும். அதன் பிறகு, மும்பைக் குப்பங்களின் முகம் நிச்சயமாக மாறிவிடும்!'
நன்றி: விகடன்

4 comments:

  1. இவர் சொல்வதை மறுக்கவில்லை. அதே நேரம் நல்ல பக்கத்தை மட்டுமே பார்க்கிறார். இது ஒருபக்க சார்பான உண்மை. எதிர்மறையான பக்கத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறார். இது பொதுவாக இந்தியர் அனவரும் மனப்பான்மை. இந்தியர்கள் கெட்டிக்காரர்கள், அமெரிக்காவில் IT துறையில் அதிகம் வேலைபார்க்கிறார்கள். இப்படி தான் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் 80% இந்தியர்கள் ஏழைகள் என்பதையோ, பாடசாலை செயல்ல வசதியற்றவர்கள் என்பதையோ, வருமானம் சாப்பாட்டிற்கே போதாது என்பதையோ, மறந்தும் பேச மாட்டார்கள். தமது இந்திய சகோதரர்கள் வறியவர்களாக இருப்பதை கண்டுகொள்வதில்லை. வறுமையை ஒழிப்பதைப் பற்றி அக்கறையுமில்லை. தங்களது வருமானம் பெருகினால் நாட்டில் வறுமை ஒழிந்து விடும் என்று நடுத்தர வர்க்கம் தன்னையும் உலகையும் ஏமாற்றுகிறது.

    ReplyDelete
  2. தாரா'வி(மோட்சனம்)

    ReplyDelete
  3. மேலே அய்யா அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே. நானும் என் வாழ்கையின் முதல் அடியை தாராவியிலிருந்து தான் ஆரம்பித்தேன். இப்போது லண்டன்னில் இருக்கும் அளவிற்கு நல்ல பக்குவத்தை கொடுத்தது என் தாராவி வாழ்க்கையே. அங்கே இருக்கும் நம் தமிழர்கள் மட்டும் அல்லாது எல்லா மொழி காரர்களும்(ஒருசிலரை தவிர- சில தமிழர்கள் உட்பட) நல்ல பண்பை உடையவர்களே. சில இளைஞர்கள் படிக்கிற வயதில் படிக்காமல் கெட்டு போனாலும் உத்யோகம் செய்யும் வயதில் அசராமல் உழைக்கும் பழக்கத்திற்கு வந்து விடுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட வயதில் இருக்கும் இளைஞர்கள் தான் இருக்கிறார்கள் மற்றபடி இப்போதேல்லாம் குழந்தைகள் நல்ல ஆங்கிலம் படிக்கும் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். சிறு தொழிலை பொருத்தவரை ஒரே நாளில் கோடிகளில் பணம் புழங்கும் இடமாகவே உள்ளது. ஒரு கருத்து உண்டு தாராவியில். அதாவது தாராவியில் வாழ்ந்தவன் உலகில் எந்த இடத்திலும் வாழ முடியும். ஒரு ஒரு விஷயம் என்னை பொருத்தவரை உறுத்துகிறது, என்னவென்றால் முழு மும்பைக்கும் விற்பனை ஆகும் காரி மற்றும் பேக்கரி பொருட்கள் தாராவியில் தயாராவதால் அங்குள்ள மக்களுக்கு பேக்கரியிலிருந்து வெளியாகும் புகை மிக கடும் சுவாச கோளாறை ஏற்படுத்தும். அதை அரசோ அல்ல மேலே சொன்ன அயா அவர்களும் சரி செய்தால், மக்கள்தொகை அதிகம் உள்ள தாராவியில் நோய் வரும் வாய்ப்பு கொஞ்சம் குறையும். நான் தாராவியின் மத்திய பகுதியில் வசித்தவன், பால்வாடி கணேசர் கோயில் பகுதியில் வாழ்ந்தவன்,. நன்றி.

    ReplyDelete
  4. நன்றி ராஜா!


    அரசின் உதவியை எதிற்பப்பதை விட, உங்களைப் போல் நல்ல நிலையில் இருப்பவர்கள் குப்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவலாமே! பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டிக் கொடுக்கலாம். சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்!!!!

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com