Wednesday, February 18, 2009

'பாத்திரமறிந்து பிச்சை போடுவோம்! - தமிழருவி மணியன்

ழத்தமிழர் நலனுக்காகப் போராடப் புறப்பட்ட வர்கள், இந்தியத் தமிழரைத் திராவிடத் தமிழராக மாற்றுவதற்குப் புதிய புறநானூற்றுப் போர்க்கோலம் பூண்டுவிட்டது ஏன்?' என்று புரியவில்லை. 'தமிழீழம் மலர்ந்தால், தனித் தமிழ்நாடு உருவாவது தவிர்க்க முடியாது!' என்று சொல்லியே ஈழத்தமிழருக்கு எதிராகச் செயற்படும் சில சக்திகளின் விஷவலையில் விழுகின்ற மனிதர்களால், எந்த நற்பயனும் ஏற்படப் போவதில்லை. காங்கிரஸ் மீதுள்ள கோபம், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக ஏன் எழவேண்டும்? சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும்தான் இந்தி யாவா?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினம் நாற்பது தொகுதிகளிலும் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் ஆதரவின்றி, மன்மோகன் சிங் அரசு அமைந்திருக்க முடியாது! மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபக்ஷேவின் சிங்களப் பேரினவாத பாசிச அரசுக்கு ஆதரவாகவும்,தமிழினத்துக்கு எதிராக வும் செயற்படுவதைக் கண்டித்து நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்.பி-க்கள் அனைவரும் இனவுணர்வுடன் இணைந்து ஆதரவை திரும்பப் பெற்றிருந்தால்... மன்மோகன் சிங்கின் பிரதமர் நாற்காலி ஆட்டம் கண்டிருக்குமே! சோனியா காந்தியின் செல்வாக்கு சரிந்திருக்குமே! மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ராஜசுகம் அனுபவிப்பவர்களின் இனத்துரோகத்துக்கு இந்திய ஒருமைப்பாடு என்ன செய்யும்?

'தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளிலும் இந்திய அரசு, நம்மைப் புறக்கணித்தே வருகிறது. கேரளத்தோடு முல்லை பெரியாறு, கர்நாடகத்தோடு காவிரி, ஆந்திராவோடு பாலாறு எனப் பல ஜீவாதாரப் பிரச்னைகளில் தமிழகத்தின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, நாம் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இதனால், 'தமிழ்நாடு இனியும் இந்தியா வோடு இருக்க வேண்டுமா?' என்ற கேள்வி இப்போது மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் திராவிட நாடு தேவைப்படுகிறது!' என்று தீக்குளித்த தியாகிகளுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் ஆர்ப்பரித்திருக்கிறார் திருமாவளவன். அவருடைய கருத்தில் அவரே முரண்படுகிறார். கர்நாடகமும், ஆந்திரமும், கேரளமும், தமிழகமும் இணைந்தது தானே திராவிடம்! திராவிட நாடாகிவிட நாங்கள் தயார் என்று திருமாவளவனிடம் கன்னடரும், ஆந்திரரும், மலையாளிகளும் தனியாக வந்து வாக்குறுதி வழங்கினார்களா? திராவிட நாடு கண்டதும் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு தண்ணீரைத் தமிழருக்குத் தடையின்றித் தருவதாக உறுதிமொழி கொடுத்தார்களா? இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியே பிரிந்துவிட்டால்... தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களின் மீது போர் தொடுப்பாரா? திருமாவளவன் விளக்க வேண்டும்.

தமிழனத்தின் நலன்களை இந்திய அரசு புறக்கணிப் பதால்... தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிட்டதாகக் கொஞ்சம் கற்பனை செய்வோம். 'காரைக்குடி தண் ணீரைத் திருப்பத்தூருக்குத் தரக்கூடாது!' என்று உண்ணாவிரதம் இருந்தது திருமாவுக்குத் தெரியாதா? தமிழகத்தின் வட மாவட்டங்களைப் போல் தென் மாவட்டங்கள் கல்வி, தொழில், போக்குவரத்து போன்றவற்றில் வளர்ச்சியுறாமல் தேங்கி நிற்பதால், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!' என்று கோஷம் எழுப்பி, தங்கள் நலன் காக்கத் தனியே பிரிகிறோம் என்று சொன்னால் என்ன செய்வது? மீண்டும் தொண்டை மண்டலம், சோழ மண்டலம், தென்பாண்டி மண்டலம் தேவையா? கொசு கடிக்கிறது என்பதற்காக, குடியிருக்கும் வீட்டின் கூரையையா இடிப்பது?

'திராவிட நாட்டைப் பெறவும், அதற்கான காரியம் செய்யவும் நாம் தயாராக இருக்கவேண்டும். திராவிட நாடு, தனிநாடாகிவிட்டால் நமக்கு நம் ஆயுள்வரை ஓய்வு கிடைக்காது. திராவிடன் என்ற பெயரையும், 'திராவிட நாடு' தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதையும் நாம் குறிச் சொல்லாகவும், லட்சியத் திட்டச் சொல்லாகவும் கொண்டாக வேண்டும்' [குடியரசு-29.01.1944] என்று அறைகூவல் விடுத்த பெரியார், தன்னுடைய குரலுக்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மூன்றும் சிறிதும் செவிசாய்க்கவில்லை என்றதும் 'திராவிடநாடு' கோரிக்கையைக் கைவிட்டு, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கொடியைக் கையில் எடுத்தார். 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மட்டும் அவர் மாற்றவில்லை. 'ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்துவிடுவார்கள். அவர்களைத் தவிர்க்கவே 'தமிழர்' என்று சொல்வதற்கு பதில் 'திராவிடர்' என்கிறேன்' என்றார் பெரியார். திருமாவளவன் கேட்பது திராவிட நாடா? அல்லது பெரியார் விளக்கிய திராவிடத் தமிழ்நாடா? புரியவில்லை!

தன்னுடைய தள்ளாத வயதிலும் குடலிறக்க நோய் தந்த துயரத்தைச் சகித்து, மூத்திரச் சட்டி யுடன் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தன்னலமின்றி, பதவி வேட்கையற்றுமக்களைச் சந்தித்த பெரியாரின் பிரிவினை முழக்கத்துக்குத் தமிழகம் தலைசாய்க்கவில்லை.'திராவிடப் பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படு கின்றன; வளங்கள் பறிக்கப்படுகின்றன; தனித் தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களி லிருந்து மீளத்தான் நாங்கள் தனிநாடு கேட்கிறோம் என்று (நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் - 25.01.1963) அண்ணா முழங்கினார்.

பின்னர், 'திராவிட நாடே கழகத்தின் குறிக் கோள்!' என்று பிரகடனம் செய்த கழகத்தின் 2-வது விதியை நீக்கி, அதற்கு பதிலாக, 'தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது...' என்று ஒருமனதாக மாற்றியது தி.மு.கழகத் தலைமை. அந்த 'திராவிடக் கூட்டமைப்பு' கூக்குரலும் காலநடையில் ஓசையற்றுப் போனது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அண்ணல் அம்பேத்கர், 'இந்தியா பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாகப் பல நாடுகள்இணைந்து இந்தியக் கூட்டாட்சி உருவாகாத தால்,இந்தியாவிலிருந்து பிரிந்து போகக்கூடிய உரிமை எந்த மாநிலத் துக்கும் இல்லை. அது அழிக்க முடியாத கூட்டாட்சி என்பதால் 'ஒன்றியம்' எனப்படுகிறது. இந்த நாடும், அதன் மக்களும் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்திய நாடு ஒன்றாகக் கலந்துவிட்ட ஒரு முழுமையான நாடு. அதன் மக்கள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்த, தனித்த ஓர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருபவர்கள்!' என்று விளக்கியதை 'திராவிடர் நாடு திருமாவளவன்கள்' அறிதல் நலம். காந்தியிடம் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்துக்காக, வருணாசிரம இந்து மதம் தீண்டாமை மூலம் தலித்களைத் தாழ்த்தப் பட்டவர்களாக ஆக்கியதற்காக, காந்தியையும் காங்கிரஸையும் இந்து மதத்தையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்கர், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் குழி தோண்டவில்லை!

ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும், மலையகத் தோட்டத் தமிழரின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேலிகளைத் தாண்டி, கருத்து வேற்றுமைகளை மீறி ஒன்றாகக் கைகோத்து ஓங்கிக் குரல் கொடுக்கவேண்டிய தருணத்தில் தங்கபாலுவும் திருமாவளவனும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனக் கணைகளை வீசிக்கொண்டிருப்பதால்... கசப்பான எதிர்விளைவுகளே ஏற்படும்.


அங்குலம் அங்குலமாக... சாவை நோக்கி நகரும் உண்ணாவிரதத்தை மகாத்மா 18 முறை தன் வாழ்வில் மேற்கொண்டார். ஒரு முறைகூட உண்ணாவிரத நோக்கம் நிறைவேறாமல், அதிலிருந்து அவர் விலகியதில்லை. பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையப்பம் இட மறுத்திருந்தால், எரவாடா சிறையில் மகாத்மா மரணத்தைத் தழுவி யிருப்பார். மகாத்மா மேற்கொண்ட உண்ணா விரதம் வேள்வி. இன்றைய அரசியல் மேடைகளில் அரங்கேறும் உண்ணாவிரதம் நாடகம். முத்துக்குமார், சென்னை அமரேசன், சீர்காழி ரவிச்சந்திரன் பாதையைப் பின்பற்றி எந்த இளைஞரும் தீக்குளிக்கவேண்டிய அவசியமில்லை. அஞ்சலிக் கூட்டங்களில் வீரவுரையாற்றும் எந்த அரசியல் தலைவராவது தீக்குளிப்பாரா? அந்த அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் யாராவது தீக்குளிக்க அவர்கள் அனுமதிப்பார்களா?


சென்ற நாடாளுமன்றத் தேர்த லில் நாற்பது இடங்களையும் ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணிக்கு அளித்த தமிழினம், வரும் தேர்தலில் ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக நின்ற கட்சிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். இப்போதிருக்கும் மத்திய அரசு, ஈழ மண்ணில் மரணத்துடன் போராடும் தமிழர்களுக்கு மருந்தும் உணவுப் பொருளும் பிச்சை போடுவதே புண்ணியம் என்ற போக்கில் செயற்படுகிறது. 'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாருமில்லை; பிச்சை எடுப்பவனைக் காட்டி லும் பரிதாபத்துக்குரியவன் யாருமில்லை' என்றார் ருஷ்யப் படைப்பாளி மாக்ஸிம் கார்க்கி. அரசியல் கட்சிகளுக்கு வாக்குப் பிச்சையும், அதன் மூலம் வாழ்க்கைப் பிச்சையும் அளிப்ப வர்கள் வாக்காளர்கள். நாம், பாத்திரமறிந்து... வரும் தேர்தலில் பிச்சை போடுவோம்.

இப்போதைய நம் நோக்கம், ஈழத் தமிழரும் மலையகத் தமிழ ரும் இன்னல் தீர்ந்து வாழ்வதுதான். அதற்கு திராவிட நாடு, தனித் தமிழ்நாடு கோஷங்கள் கால் காசுக்கு உதவாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றும் எதிரெதிராகக் கொடி பிடித்து, கோஷம் இடுவதை நிறுத்திவிட்டு... இனியாவது கூடிக் குரல் கொடுப்போம். 'என் வீரர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்... ஒருவர்கூட படையில் இருக்கமாட்டார்கள்!' என்றான் மகா ஃபிரெடரிக். ஈழப் பிரச்னையில் நம் அரசியல் தலைவர்கள் அன்றாடம் நடத்தும் நாடகத்தைப் புரிந்துகொண்டால்... அதன் பின் ஒருவர்கூட இவர்கள் பின்னால் இருக்கமாட்டார்கள்!

 நன்றி : விகடன், தமிழருவி மணியன் 

2 comments:

 1. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  tamilblogger குழுவிநர்

  ReplyDelete
 2. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

  ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com