Thursday, March 4, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விகடன் விமர்சனம்

ன்னைத் தானே தாண்டி வர முடியாமல் தவிக்கிறாள் காதலி... என்ன நடக்கும் என்பது கதை!

சிம்பிள் காதல் சினிமா. ஆனால், சிம்பு - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி... கிளாஸிக். 23 வயது வரை ஐந்தே சினிமாக்கள் மட்டுமே பார்த்திருக்கும் த்ரிஷாவை, சினிமா இயக்குநர் கனவில் இருக்கும் 22 வயது சிம்பு காதலிக்கிறார். மனம், மதம், இனம் எனப் பல காரணங்களை அடுக்கி சிம்புவின் காதலைத் தவிர்க்கும் த்ரிஷா என்ன செய்தார் என்பதைச் சொல்கிறது செம வித்தியாச கிளைமாக்ஸ்!

'காதல் டிலைட்' கௌதம் மேனனின் 'காதலர் ஸ்பெஷல்' படம். 'என் கண்ணு வழியா உன்னை யாரும் பார்க்கலை போல!', 'உன்னை முதல் தடவை பார்த்தப்ப, உன் தலைக்கு மேல இருந்த நிலா ஃபேடாகி அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகிருச்சு!', 'இனி எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். 'நினைக்காதே... முடிஞ்சு தான்போச்சு'ன்னு சொன்னா!' என அழகழகான க்ரீட்டிங் கார்டு வசனங்களே படம் முழுக்கக் காதல் நிரப்புகிறது.

வம்புதும்பு செய்யாத, விரல் வித்தை காட்டாத ஸ்மார்ட் சிம்பு. 'இவருக்குள் இப்படி ஒரு கிளாஸிக் ஆக்டரா?' என்று பல இடங்களில் நம்மை ஆச்சர் யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். காதலில் விழுந்து, கசிந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து, தவித்து... மாஸ்டர்பீஸ் கச்சிதம். வெளிநாட்டுப் பூங்காவில் த்ரிஷாவிடம், 'என் வாழ்க்கையிலும் ஒரு பொண்ணு கடந்துபோனா!' என்று ஆரம்பித்து, கண்ணீர் மறைத்து, வேதனை கடித்து, காதலில் வெம்பும் இடத்தில்... மார்வெலஸ் சிம்பு! இதுவரையிலான கிளாமர் ஹீரோயின் இமேஜ் துடைத்து, பளிச் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் த்ரிஷா... ஸோ க்யூட்! 'நண்பன்' சிம்புவின் குறும்புகளுக்கு இரும்புக் கதவாகப் பூட்டிக்கொள்வதும், ரயில் பயண முத்தங்களின்போது கதவிடுக்குக் குளிர்க் காற்றாக நெகிழ்வதும்... ஏரியா ஏஞ்சல் அழகு!

'நான் பெரிய ஆளுடா... எந்தப் பிரச்னை வந்தாலும் நான் பாத்துக்கிறேன்' என்று உதார்விடுவதும், 'இது மட்டும் கோடம்பாக்கத்துக்குத் தெரிஞ்சா... அவ்வளவுதான்!' என உதறுவதுமாக காதல் கதையில் கலகலப்பு சேர்க்கிறார் 'ஒளிப்பதிவாள நண்பர்' கணேஷ்ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தொனிக்கும் தாமரையின் பாடல்களுக்கு ஒவ்வொரு துடிப்பிலும் காதல் தவழவிடுகிறது ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ஆஸ்கருக்குப் பிறகான ரஹ்மான் டச்சில் 'ஹோசோனா', 'ஓமனப் பெண்ணே...' பாடல்கள் சர்வதேசச் சரக்கு.

இருள், பால் வெள்ளை நிலா, தென்னை மரங்கள், கரையோர வீட்டு வாசல் த்ரிஷா... கேரள அழகைக் கொள்ளைகொள்ளும் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா மொத்தப் படத்துக்கும் ரம்மிய டோன் சேர்க்கிறது.

முதல் பாதி காதல் ஃபீல்... பின்பாதி ஆரம்பித்ததுமே வற்றி வடிந்துவிடுவது ஏனோ கௌதம்? திரும்பத் திரும்ப, 'அப்பாவுக்குப் பிடிக்கணும்!' என்று கிளிப்பிள்ளை காரணம் சொல்லி, காதலை அத்தனை சிக்கலாக்கிக்கொள்ளும் த்ரிஷாவின் மனநிலையில் ஏன் அத்தனை குழப்பம்? முகவரி இல்லாமல், காதலிக்கிறாளா என்று தெரியாமல் காதலியைத் தேடிப் போகும் ஹீரோ, இரவு ரயில் பயணங்கள், வில்லனுக்கு கௌதம் மேனனின் குரல், மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஹீரோ, அத்தனை நடனங்களிலும் உடலை வளைத்து மடக்கி, ஒடித்து ஆடும் அமெரிக்க டான்ஸர்கள் என்று படம் நெடுக கௌதம் கிளிஷேக்கள்! முதல் பாதிக் காட்சிகளே இரண்டாம் பாதியை மீண்டும் மீண்டும் நிரப்பும் சமயங்களில், கண்ணைக் கட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை!

அநாவசிய நீளம், ஓயாத பேச்சு என்று சிலபல குறைகள் இருந்தாலும், கௌதம் மேனனின் காதல் பரிசுக்காக டிராஃபிக் தாண்டி தியேட்டர் தொடலாம்!

நன்றி : விகடன்

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com