மனதில் ஈரம் இல்லாதவர்களை அந்த 'ஈரம்' பழி வாங்கினால்... அதுதான் கதை!அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்துகிடக் கிறார் சிந்து மேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்குக் காரணம் என அடித்துச் சொல்கிறது அக்கம்பக்கம். ஆனால், 'நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல' என்று உறுதியாக நம்புகிறார் காவல் துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம், அவரும் சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களைத் தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால், சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேன னின் மரணம் கொலையா, தற்கொலையா,தொடர்ச் சியான மரணங்களுக்குக் காரணம் என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது ஈரம்!
ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண் ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி-சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்து மேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல் பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக் டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும் காவல் அதிகாரியின் இன்டெலி ஜென்ட்விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளைக் கடக்கும்போது எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலைக் கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன் அதே இயல்புடன் நடிக்க வும் செய்கிறார். திருச்சி கல்லூரியின் சராசரி மாணவி, புது மணப் பெண் எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை. வில்லனாக நந்தா. டி.வி-யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்து மேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒரு முறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் கிளாஸ். கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாகச் சொல்கிறார்கள். கொலையாளி ![]() யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால், அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனைக் கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்? அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்று கிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்! | ||